தேடுதல்

Vatican News
நிலக்கரி சுரங்கத்திலிருந்து மின்சக்தி தயாரிப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து மின்சக்தி தயாரிப்பு  (ANSA)

பிலிப்பீன்சில் நிலக்கரி அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு

பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, சூழலியல் விவகாரங்கள் தொடர்பான மேய்ப்புப்பணி அறிக்கைகளை, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தொடர்ந்து வெளியிட்டு வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டின் Quezon மாநிலத்தில் நிலக்கரி அணுமின் நிலையம் அமைக்கப்படும் திட்டம் கைவிடப்படுமாறு, அம்மாநிலத்தின் Lucena ஆயர் Mel Rey Uy அவர்கள், அரசை வலியுறுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்து, திருஅவையில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்தை முன்னிட்டு, நூற்றுக்கும் அதிகமான அருள்பணியாளர்களின் கையொப்பத்துடன், ஆயர் Mel Rey Uy அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டம், Quezon மாநிலத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலுமே கார்பன் வெளியேற்றத்தை அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்காலத்தில் மிக அதிகமாகத் தேவைப்படும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு, இந்தத் திட்டம் முற்றிலும் ஒத்திணங்கி வராது என்று கூறியுள்ள ஆயர், பிலிப்பீன்சில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி தயாரிப்பை அனைவரும் ஊக்குவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பீன்சில் மின்சக்தியின் தேவை அதிகரித்துவரும் இவ்வேளையில், அரசு இந்த திட்டத்தைப் பரிந்துரைத்திருப்பது, சுற்றுச்சூழலை மேலும் பாதிக்கும் மற்றும், மக்களின் நலவாழ்வுக்கும் மிகுந்த ஆபத்தாக அமையும் என்றும் ஆயரின் அறிக்கை கூறுகிறது.   

இந்த திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடும் நிறுவனங்கள் மற்றும், அதற்கு நிதி உதவிசெய்யும் அனைவரும், இப்பூமியின் அழுகுரலுக்குச் செவிசாய்க்குமாறு கேட்டுக்கொள்வதாக கூறியுள்ள ஆயர் Uy அவர்கள், ஏற்கனவே உள்ள நிலக்கரி நிலையங்கள் வெளியிடும் நச்சுகலந்த காற்றால், சுவாசம் தொடர்புடைய நோய்களாலும், தோல் நோய்களாலும் மக்கள் துன்புறுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை, சூழலியல் விவகாரங்கள் தொடர்பான மேய்ப்புப்பணி அறிக்கைகளை, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

05 September 2020, 14:18