பாகுபாட்டிற்கெதிரான சட்டவரைவு குறித்து ஆயர்கள் கவலை
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
தென் கொரியாவின் மக்களவையில் விவாதிக்கப்பட்டுவரும் பாகுபாட்டிற்கெதிரான சட்டவரைவு குறித்து, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
தென் கொரிய ஆயர் பேரவையின் உயிர்அறநெறி பணிக்குழுவின் தலைவரான, ஆயர் Mathias Lee Yong-hoon அவர்கள், வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டின் மக்களவையில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடல்களில், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அமைக்கப்படும் திருமணம், குடும்ப அமைப்பு, ஆண்-பெண் உறவு போன்றவற்றின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஓரினச்சேர்க்கையாளர்கள், மூன்றாம் பாலினத்தவர் போன்றோருக்கு எதிரான நடவடிக்கை உட்பட, எல்லாவிதமான பாகுபாடுகளையும் களைவதற்கு, தென் கொரிய மக்களவை முயற்சித்து வருவது குறித்து, ஆயர் Yong-hoon அவர்கள், கவலை தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே அமையும் திருமண அன்பின் வழியாக, குழந்தைகள் உருவாகவேண்டும், இது, திருமண அன்பின் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றது, இத்தகைய சூழலில், மனிதர் வளர்த்தெடுக்கப்படுவது இன்றியமையாதது என்பதையும், தென் கொரிய ஆயர்கள் சார்பில் ஆயர் Yong-hoon அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்,
பாகுபாடுகள் களையப்படவேண்டும் என்ற பெயரில், உண்மையான குடும்ப அமைப்பு புறக்கணிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கூறும் ஆயரின் அறிக்கை, கலாச்சாரம், பாலினம், சமுதாய அமைப்பு, மொழி, மதம் போன்ற எவ்வித பாகுபாடுகளும் இன்றி, அனைவரின் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்பதில் திருஅவை உறுதியாய் உள்ளது என்றும் கூறுகிறது.(UCAN)