தேடுதல்

Vatican News
இந்தியாவில் வேளாண்மை இந்தியாவில் வேளாண்மை  (AFP or licensors)

அழுகிப்போன தானியங்களை விநியோகித்தவர்களுக்கு எதிராக...

நியாயவிலைக் கடைகள் வழியாக, உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்படும் அரசின் அமைப்புமுறை, இலாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது – போபால் பேராயர் லியோ கொர்னேலியோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள் 

இந்தியாவில், மத்திய பிரதேச மாநிலத்தில், அரசின் நியாயவிலை கடைகள் வழியாக விநியோகிக்கப்பட்ட உணவு தானியங்கள், பயனற்றவை மற்றும், பழுதானவை என்ற தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன என்று, அம்மாநில திருஅவைத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில், பழங்குடி இன மக்கள் அதிகமாக வாழ்கின்ற, Mandla மற்றும், Balaghat ஆகிய இரு மாவட்டங்களில், விநியோகிக்கப்பட்டுள்ள அரசி, மனிதர் உண்பதற்குத் தகுதியற்றவை என்று, மத்திய அரசின் அறிக்கைகள் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றது என்று, போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள், யூக்கா செய்தியிடம் கூறினார்.

இந்த செயலுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று, அரசை வலியுறுத்தியுள்ள பேராயர் கொர்னேலியோ அவர்கள், நியாயவிலைக் கடைகள் வழியாக, உணவுப்பொருள்கள் விநியோகிக்கப்படும் அரசின் அமைப்புமுறை, இலாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று குறை கூறினார்.

பொதுவாக, ஏழை மக்கள், அரசு விநியோகிக்கும் உணவுப்பொருள்களை, குறிப்பாக, இந்த கோவிட்-19 காலத்தில் அந்த உணவுப்பொருள்களையே சார்ந்திருக்கும் நிலை அதிகரித்துவரும்வேளையில், மனிதர் உண்பதற்குப் பயனற்ற அழுகிப்போன அரசிகளை ஏழைகளுக்கு வழங்கியிருப்பது மிகுந்த கவலை தருகின்றது என்று, பேராயர் கொர்னேலியோ அவர்கள் கூறினார். 

மத்திய பிரதேச மாநிலத்தின் 7 கோடியே 10 இலட்சம் மக்களில், ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர், இவர்கள், ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உண்டு வாழ்பவர்கள் என்பதையும், பேராயர் கொர்னேலியோ அவர்கள், யூக்கா செய்தியிடம் எடுத்துரைத்தார்.

இந்திய நுகர்வு விவகாரம், உணவு மற்றும், பொது உணவு விநியோகத்திற்குப் பொறுப்பான அமைச்சகம், நியாயவிலைக் கடைகளிலிருந்து மாதிரிக்கு எடுத்த 32 உணவு தானியங்கள், இவ்வாண்டு மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையே அரசி ஆலைகளில் தயாரிக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சாக்குகளும், குறைந்தது இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குமுன் தயாரிக்கப்பட்டவை. இந்த சாக்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரசிகள் மனிதர் உண்பதற்குத் தகுதியற்றவை  என்று யூக்கா செய்தி கூறுகிறது. 

மத்திய பிரதேச மாநிலம், பிஜேபி ஆதரவுடைய கட்சியால் ஆளப்பட்டு வருகிறது (UCAN)

08 September 2020, 13:08