தேடுதல்

கர்தினால் ஜான் டாங் ஹான் கர்தினால் ஜான் டாங் ஹான்  

சமுதாய நிலைநெருக்கடி சூழலில் ஒன்றிப்பு அவசியம்

நீதி, மக்களாட்சி, மற்றும், தரமான வாழ்க்கைமுறை ஆகியவற்றை, குடிமக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பது நியாயமானதே. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை – ஹாங்காங் கர்தினால் டாங்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தில் கிளர்ச்சிகளும், கொந்தளிப்புகளும் இடம்பெறும் காலங்களில், கத்தோலிக்கர், திருஅவையின் போதனையால் வழிநடத்தப்பட்டு, ஒன்றிப்பைக் கடைப்பிடிக்குமாறு, ஹாங்காங் கர்தினால் ஜான் டாங் ஹான் (John Tong Hon) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டில், ஹாங்காங்கை முடக்கிப்போட்ட சமுதாயக் கிளர்ச்சிகள், குழப்பநிலைகள் மற்றும், பிரிவினைச் சூழல்கள் பற்றி, அண்மையில் மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் டாங் அவர்கள், இச்சூழல்களில், திருஅவையின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்துள்ளார்.

நீதி, மக்களாட்சி, மற்றும், தரமான வாழ்க்கைமுறை ஆகியவற்றை, குடிமக்கள் அரசிடமிருந்து எதிர்பார்ப்பது நியாயமானதே. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை என்றும் கூறியுள்ள கர்தினால் டாங் அவர்கள், இதில், கத்தோலிக்க சமுதாயத்தில் பிரிவினைகள் நிலவின என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாய மற்றும், அரசியல் தலைவர்களிடம், விசுவாசிகள், தங்களின் மாறுபட்ட கருத்துக்களைச் சுதந்திரமாகத் தெரிவிக்கலாம், ஆயினும், இத்தகைய மாறுபட்ட கண்ணோட்டங்கள், திருஅவைக்குள் பிரிவினைக்கு வழியமைக்கக்கூடாது என்று, கர்தினால் டாங் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.    

ஹாங்காங்கில், சமுதாய, அரசியல் சீர்திருத்தங்கள் இடம்பெறவேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக, சில குழுக்களுக்கிடையே காழ்ப்புணர்வு உருவாகியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் டாங் அவர்கள், திருஅவை, மக்களாட்சி அரசுக்கு, எப்போதும் ஆதரவளிக்கின்றது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2020, 13:40