தேடுதல்

Vatican News
புனித பூமி புனித பூமி  (AFP or licensors)

செப்டம்பர் 13, புனித பூமி கிறிஸ்தவர்களுக்கென நிதி திரட்டு

கிறிஸ்தவத்தின் தொட்டிலாக இருந்த புனித பூமி, தற்போது கிறிஸ்தவர் இன்றி இருக்கும் நிலையை எதிர்நோக்குகின்றது. உண்மையில் அங்கு அமைதி இல்லை. அங்கு இடம் பெறும் வன்முறையினால் கிறிஸ்தவர்கள் வெளியேறுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித பூமியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்களுக்கென, செப்டம்பர் 13, இஞ்ஞாயிறன்று நிதி திரட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பூமி கிறிஸ்தவர்களுக்கென்று, ஒவ்வோர் ஆண்டும், புனித வெள்ளி திருவழிபாட்டில் நிதி திரட்டப்படும் வழக்கம், கொரோனா தொற்றுக்கிருமி பரவல் காரணமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலோடு, இவ்வாண்டு தள்ளிவைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 2ம் தேதி, கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள் அறிவித்தபடி, செப்டம்பர் 14, திருச்சிலுவை உயர்த்தப்பட்ட விழாவுக்கு முந்திய நாளாகிய, செப்டம்பர் 13, இஞ்ஞாயிறன்று, புனித பூமிக்கென நிதி திரட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித பூமிக்கென்று திரட்டப்படும் நிதி, அப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கும், அப்பகுதியின் கிறிஸ்தவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், புனித பூமியை விட்டுச்சென்ற கிறிஸ்தவர்கள், தாயகம் திரும்புவதற்கும், உள்ளூர் கிறிஸ்தவர்கள் புலம்பெயராமல் இருப்பதற்கும் பயன்படுத்தப்படும் என்று, புனித பூமியின் காவலர்களான, பிரான்சிஸ்கன் சபைத் துறவியர் அறிவித்துள்ளனர்.  

உலகளாவியத் திருஅவையில், புனித வெள்ளியன்று திரட்டப்படும் நிதி, புனித பூமிக் கிறிஸ்தவர்க்கெனப் பாரம்பரியமாகச் செலவழிக்கப்படுகின்றது.

கிறிஸ்தவத்தின் தொட்டிலாக இருந்த புனித பூமி, தற்போது கிறிஸ்தவர் இன்றி இருக்கும் நிலையை எதிர்நோக்குகின்றது என்றும், உண்மையில் அங்கு அமைதி இல்லை என்றும், அங்கு இடம்பெறும் வன்முறையினால், கிறிஸ்தவர்கள் வெளியேறுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

12 September 2020, 14:05