நலவாழ்வு பணியாளர்கள் மீதுள்ள பயணத் தடை நீக்கப்பட...
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பிலிப்பீன்ஸ் நாட்டு நலவாழ்வுப் பணியாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகள் அகற்றப்படுவதன் வழியாக, அவர்கள் வெளிநாடுகள் சென்று பணியாற்றவும், அதன் வழியாக, அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு உதவவும் முடியும் என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்த்தே அவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிலிப்பீன்சில், மருத்துவர்கள் மற்றும், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு, அவர்கள், நாட்டைவிட்டு வெளியேறுவது, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது என்று யூக்கா செய்தி கூறுகிறது.
அந்நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கிருமி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு போதுமான நலவாழ்வுப் பணியாளர்கள் இல்லை என்று, அரசு தரப்பில் கூறப்படுவதை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள ஆயர்கள், வெளிநாடுகளில் பணியாற்றும் நலவாழ்வுப் பணியாளர்களின் வருமானங்கள், அவர்களின் குடும்பங்களுக்குப் பெரிதும் உதவுகின்றன என்று கூறியுள்ளனர்.
வெளிநாடுகளில் பணியாற்றும் நலவாழ்வுப் பணியாளர்கள், மீண்டும் அந்நாடுகளுக்குச் செல்லத் தடைவிதித்திருப்பது, நியாயமற்றது மற்றும், அவர்களின் குழந்தைகள் மீது கருணை காட்டப்படாததைக் குறிக்கும் என்று, ஆயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போதைய ஆள்குறைப்பு நடவடிக்கையால், 28 இலட்சத்திற்கு அதிகமான பிலிப்பீன்ஸ் வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. (UCAN)