தேடுதல்

Vatican News
Moria முகாமில் புலம்பெயர்ந்தோர் Moria முகாமில் புலம்பெயர்ந்தோர்   (AFP or licensors)

Moria முகாம் தீ விபத்து, ஐரோப்பா வெட்கப்படவேண்டும்

Moria புலம்பெயர்ந்தோர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மட்டுமல்ல, ஐரோப்பாவின் தனித்துவம் எரிந்துகொண்டிருக்கிறது என்பது குறித்தும், இடர்நிறைந்த சூழலில் உதவிகேட்டு ஐரோப்பா வந்த மக்களின் மனங்களில் ஏமாற்றத்தை உருவாக்கியதற்கும், ஐரோப்பா வெட்கப்படவேண்டும் - கர்தினால் Hollerich

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கிரேக்க நாட்டுத் தீவான லெஸ்போசில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் முகாமில், தீ விபத்து பெரிய அளவில் இடம்பெற்றுள்ளதை முன்னிட்டு, புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் பாதுகாக்கப்படுமாறு, பல்வேறு சமயத் தலைவர்களும், மனிதாபிமான அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

Moria புலம்பெயர்ந்தோர் முகாமில், செப்டம்பர் 8 இச்செவ்வாய் இரவும், செப்டம்பர் 9 இப்புதனன்றும் ஏற்பட்ட தீ விபத்தால், ஏறத்தாழ 13,000 புலம்பெயர்ந்தோர் வாழ்விடம் இன்றி முகாமைவிட்டு வெளியேறியுள்ளனர். 3,000 மக்களுக்கென்று கட்டப்பட்ட அந்த முகாமில், ஏறத்தாழ 13,000 பேர் வாழ்ந்தனர்.  

அரசுகளுக்கு ஆயர்கள் அழைப்பு

இந்த தீ விபத்து குறித்து, வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (COMECE) தலைவரான, கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள், ஐரோப்பியக் கண்டத்திலுள்ள மிகப்பெரும் Moria முகாமில் இடம்பெற்ற தீ விபத்து குறித்து, ஐரோப்பா வெட்கப்படவேண்டும் என்று கூறினார்.

இந்த விபத்து குறித்து மட்டுமல்ல, ஐரோப்பாவின் தனித்துவம் எரிந்துகொண்டிருக்கிறது என்பது குறித்தும், இடர்நிறைந்த சூழலில் உதவிகேட்டு ஐரோப்பா வந்த மக்களை, கிரேக்க நாட்டின் சிறிய தீவில் வைத்து, அவர்களுக்குத் தேவையானவற்றை செயலில் காட்டாமல், பல சொற்களோடு நிறுத்திக்கொண்டதற்கும், அந்த மக்களின் மனங்களில் ஏமாற்றத்தை உருவாக்கியதற்கும், ஐரோப்பா வெட்கப்படவேண்டும் என்று, கர்தினால் Hollerich அவர்கள், கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு மே மாதத்தில், திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான, கர்தினால் Konrad Krajewski அவர்களுடன், அந்த முகாமை தான் பார்வையிட்டதையும், கர்தினால் Hollerich அவர்கள் நினைவுகூர்ந்துள்ளார்.

ஜெர்மன் தலத்திருஅவை

இந்த தீ விபத்திற்குப்பின், ஜெர்மன் ஆயர் பேரவையின் இணைய பக்கத்தில் அறிக்கை வெளியிட்ட, புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரான Hamburg பேராயர் Stefan Hesse அவர்கள், புலம்பெயர்ந்தோக்கு எதிராக காட்டப்படும் புறக்கணிப்பு நிறுத்தப்படுமாறு,  அரசியல் மற்றும், திருஅவையில் பொறுப்பு வகிப்பவர் எல்லாருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில், ஐரோப்பிய தோழமையுணர்வில், அரசியல் முறைப்படி தீர்வுகாணப்படுமாறு வலியுறுத்தியுள்ள பேராயர் ஹெஸ்ஸே அவர்கள், புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில், ஐரோப்பா, இனிமேலும் கண்களை மூடிக்கொண்டு இருக்கமுடியாது என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யுனிசெப் அமைப்பு

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் யுனிசெப் குழந்தை நல அமைப்பும், இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ள அதேவேளை, அந்த முகாமிலுள்ள நான்காயிரத்திற்கு அதிகமான சிறார்க்கு உதவத் தயாராக இருப்பதாகவும்,  இவர்களில் 407 சிறார் பெற்றோரின்றி தனியாக உள்ளனர் எனவும் அறிவித்துள்ளது.

11 September 2020, 13:57