தேடுதல்

Vatican News
கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ 

திருஅவையின் வாழ்வு, செயல்முறை சூழலியலோடு தொடர்புள்ளது

சுற்றுச்சூழலை மதிப்பது, கடவுளின் பெயருக்கு ஆராதனை செலுத்தும் செயலாகும், அதேநேரம், படைப்பை அழிப்பது, படைத்தவருக்கு எதிராக ஆற்றப்படும் குற்றம் ஆகும் -முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

செப்டம்பர் 01, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள, படைப்பின் காலத்திற்கென்று, செய்தி வெளியிட்டுள்ள, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள், திருஅவையின் வாழ்வு, செயல்முறை சூழலியலோடு எவ்வாறு தொடர்புகொண்டுள்ளது என்பதை விளக்கியுள்ளார்.

திருஅவையின் அருளடையாளங்கள், வழிபாட்டு வாழ்வு, தவ வாழ்வு, குழும வாழ்வு, விசுவாசிகளின் அன்றாட வாழ்வு ஆகிய அனைத்துமே, படைப்பின் மீதுள்ள மிகுந்த மதிப்பை வெளிப்படுத்துகின்றன மற்றும், உருவாக்குகின்றன என்று, முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் கூறியுள்ளார்.

மனித வரலாற்றில், முன்னெப்போதும் இல்லாத வகையில், சுற்றுச்சூழல் மாற்றங்கள், தற்போது மிகவும் அச்சுறுத்தி வருகின்றன என்பதை எல்லாருமே ஏற்கின்றோம் என்றுரைத்துள்ள முதுபெரும்தந்தை, இப்பூமியின் புவியியல் ஆய்வுகள் குறித்த பேராசைகள் மற்றும், பொருளாதார தன்னாட்சி காரணமாக, நாடுகளும், பொருளாதாரத்தில் தீர்மானம் எடுப்பவர்களும், படைப்பைப் பாதுகாப்பதற்குச் சரியான தீர்மானங்கள் எடுக்க இயலாமல் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் முதன் முறையாக, இப்பூமியில், வாழ்வின் நிலைகளை, மனிதர் அழித்துள்ளனர் என்று கவலைதெரிவித்துள்ள முதுபெரும்தந்தை, மனிதர் தம்மை கடவுளாக நோக்குவதன் வெளிப்பாடாக, அறிவியல் மற்றும், தொழில்நுட்ப முன்னேற்றத்தின்  அடையாளங்களாக, அணு ஆயுதங்கள் உள்ளன, ஆனால், அறிவியல், மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும், நோய்களை ஒழிக்கவும் உதவவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்காலத்தில் பல்லுயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், சுற்றுச்சூழலை மதிப்பது, கடவுளின் பெயருக்கு ஆராதனை செலுத்தும் செயலாகும், அதேநேரம், படைப்பை அழிப்பது, படைத்தவருக்கு எதிராக ஆற்றப்படும் குற்றம் ஆகும் என்று கூறியுள்ளார்.

01 September 2020, 13:44