நேர்காணல்: புனித அகுஸ்தீனாரின் “ஒப்புகைகள்” நூல் பகுதி 2
மேரி தெரேசா: வத்திக்கான்
அருள்பணி முனைவர் இயேசு கருணா அவர்கள், புனித அகுஸ்தீனார் இலத்தீன் மொழியில் எழுதிய Confessiones என்ற உலகப் புகழ்பெற்ற நூலை, அழகுமிழில், “ஒப்புகைகள்” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்து, 13 தொகுப்புக்களாக வெளியிட்டுள்ளார். திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியில், விவிலியப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்ற, அருள்பணி இயேசு கருணா அவர்கள், வத்திக்கான் வானொலி நேயர்களுக்கென்று, கடந்தவார நேர்காணல் நிகழ்ச்சியில், அந்த நூலின் அறிமுகத்தை வழங்கினார். அதைத் தொடர்ந்து இன்று, “ஒப்புகைகள்” நூலின் முக்கிய கருத்துருக்கள், அந்த நூலில் அவர் இரசித்தவை, புனித அகுஸ்தீனாரின் வாழ்க்கைச் சுருக்கம் போன்றவற்றை, சமுதாய ஊடகம் வழியாக வழங்குகிறார்.
புனித அகுஸ்தீனாரின் பொன்மொழிகள்
தீயவன் ஒருவனின் அநீதியால் நீ துன்புற்றால், அவனை மன்னித்துவிடு. இல்லையெனில், உலகில் உன்னையும், அவனையும் சேர்த்து இரு தீயவர்கள் உருவாகி விடுவார்கள்.
நம் உள்மனத்தின் பிரதிபலிப்பே இந்த உலகம்.
நீ எந்த அளவிற்கு மேலே செல்ல விரும்புகிறாயோ, அந்த அளவுக்கு தாழ்ச்சியில், நீ கீழே செல்லவேண்டும்.
கடவுள் நம் வீட்டில்தான் இருக்கிறார். நாம்தான் வீட்டைவிட்டு வெளியே அலைந்து திரிகிறோம்.
இறைவா, எம் தலைவரே, உமக்காகவே நீர் எங்களைப் படைத்ததால், உம்மில் அமைதி காணும்வரை எம் இதயம் அமைதி கொள்வதில்லை