தேடுதல்

Vatican News
அழிந்துவரும் ஈக்குவதோர் நாட்டு அமேசான் காட்டுப்  பகுதி அழிந்துவரும் ஈக்குவதோர் நாட்டு அமேசான் காட்டுப் பகுதி   (ANSA)

படைப்பைப் பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட...

படைப்பின் காலம் என்ற சிறப்பு இறைவேண்டல் முயற்சியையும், 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையும் முன்னிட்டு, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 1, இச்செவ்வாயன்று துவங்கியுள்ள படைப்பின் காலம் என்ற சிறப்பு இறைவேண்டல் முயற்சியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையும் முன்னிட்டு, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பு, செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

படைப்பின் நலனுக்காக ஒவ்வொருவரும் இறைவேண்டல் செய்வது முக்கியம் என்று வலியுறுத்தும் ஆயர்கள், அதே வேளையில், ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற அளவு, படைப்பைப் பாதுகாக்கும் முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

CELAM என்றழைக்கப்படும் இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பின் தலைவர், பேராயர் Miguel Cabrejos Vidarte அவர்கள், திருத்தந்தையோடும், இன்னும் உலகின் அனைத்து கிறிஸ்தவ சபையின் உடன்பிறந்தோருடனும் இணைந்து, இறைவேண்டல் மற்றும் செயல்பாடுகள் வழியே, இந்த பொருள்நிறைந்த காலத்தை செலவழிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

சுற்றுச்சூழலை மையப்படுத்தி திருத்தந்தை வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலை, அடுத்து வரும் நாள்களில் மீண்டும் ஒருமுறை படித்து பயன்பெறுமாறு, பேராயர் Vidarte அவர்கள், மக்களிடம் விண்ணப்பித்துள்ளார்.

சுற்றுச்சூழல் சீரழிவும், காலநிலையின் எதிர்மறையான மாற்றங்களும் மனிதரின் தவறான செயல்பாடுகளால் விளைந்தன என்பதை உணர்ந்து, அவற்றிற்குப் பரிகாரமாக, அடுத்துவரும் நாள்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு, நேர்மறையான செயல்பாடுகளில் ஈடுபட, பேராயர் Vidarte அவர்கள், அழைப்பு விடுத்துள்ளார்.

03 September 2020, 14:55