தேடுதல்

Vatican News
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன்  (WFP/Mohammed Awadh)

சுவிட்சர்லாந்து ஆயுத ஏற்றுமதி, போர்களுக்கு உதவுகின்றது

அமைதியைக் கட்டியெழுப்புவதில் முன்னோடியாகத் திகழ்வதாக நோக்கப்படும் சுவிட்சர்லாந்து நாடு, அழிவுகளை ஏற்படுத்தும் இராணுவக் கருவிகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதிலிருந்து விலகியிருக்கவேண்டும் - சுவிட்சர்லாந்து காரித்தாஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சுவிட்சர்லாந்து நாட்டில், போர் தொடர்பான ஆயுத ஏற்றுமதி அதிகரித்து வருவது, ஏமன் நாட்டிலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலும், போர்கள் தீவிரமடைய உதவுவதுபோல் தெரிகின்றது என்று, சுவிட்சர்லாந்து நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் தலைவர் ஒருவர், கவலை தெரிவித்துள்ளார்.

காரித்தாஸ் அமைப்பின் வளர்ச்சித்திட்ட கொள்கைத்துறையின் தலைவர்  Patrik Berlinger அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏமன் நாட்டில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில், சுவிட்சர்லாந்து நாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், சுவிட்சர்லாந்து நாடு, ஆயுதங்களைக் கூடுதலாக ஏற்றுமதி செய்வது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, ஆயுத மோதல்களுக்கு உதவுவதுபோல் தெரிகின்றது என்றும் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டில், சுவிட்சர்லாந்து நாடு 71 நாடுகளுக்கு, போர் சார்ந்த ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது என்றும், இதனால் ஏறத்தாழ 67 கோடியே 40 இலட்சம் யூரோ அந்நாட்டிற்கு கிடைத்துள்ளது என்றும், இந்த வருவாய், 1938ம் ஆண்டிலிருந்து 43 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும், அண்மையில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.

வறிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் சுவிட்சர்லாந்தின் இலக்குகள், ஆயுத ஏற்றுமதி நடவடிக்கையோடு ஒத்துச்செல்கின்றதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள, Berlinger அவர்கள், அந்நாட்டின் இந்நடவடிக்கை அதிர்ச்சியூட்டுகின்றது என்று கூறியுள்ளார்.

அரேபிய தீபகற்பம், பங்களாதேஷ் போன்ற, வறிய அல்லது கடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் போர்ப் பகுதிகளுக்கு, சுவிட்சர்லாந்து நாடு, ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ வளர்ச்சி சார்ந்த கொள்கைகளுக்கு முரணானது என்று, Berlinger அவர்கள் குறை கூறியுள்ளார்.

அமைதியைக் கட்டியெழுப்புவதில் முன்னோடியாகத் திகழ்வதாக நோக்கப்படும் சுவிட்சர்லாந்து நாடு, அழிவுகளை ஏற்படுத்தும் இராணுவக் கருவிகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள Berlinger அவர்கள், ஆயுத விற்பனை, போர்களுக்கும், வன்முறைக்கும் எரிபொருள் வழங்குவதோடு, உள்ளூர் மக்களையும் பாதிக்கின்றது என்றும், அது பன்னாட்டு தூதரக உறவுகளின் மதிப்பையும் குறைக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

11 September 2020, 14:02