தேடுதல்

Vatican News
பாகிஸ்தானில் பெருமழை பாதிப்பு பாகிஸ்தானில் பெருமழை பாதிப்பு  (AFP or licensors)

பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் காரித்தாஸ் பணி

பெருமழையால் பாதிக்கப்பட்ட கராச்சியில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 700க்கும் மேற்பட்டோருக்கு சமைத்த உணவை வழங்கிவருகிறது காரித்தாஸ் அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கிராமங்களில், தற்காலிக தங்குமிடங்களை அமைத்தும், உணவு உதவிகளை வழங்கியும், மக்களோடு இணைந்து வாழ்ந்து வருகிறது, பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு.

ஜூன் மாதம் துவங்கி, பெய்து வரும் மழை, ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி 24 மணி நேரம் தொடர்ந்து பெய்ததால், கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் வாழ்வு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறார்களுக்கு மருத்துவ உதவிகள், குடும்பங்களுக்கு உணவு  விநியோகம், குடியிருப்புகளை இழந்தோருக்கு தற்காலிக தங்குமிடம் என பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது, பாகிஸ்தானின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.

பாகிஸ்தானின் Chenab ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கால்வாய்களும் கண்மாய்களும் உடைப்பெடுத்ததைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்திலுள்ள Balkana கிராமத்தின் காரித்தாஸ் கட்டிடத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததுடன், அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்ட 60 கிராமங்களில், பல்வேறு தற்காலிக தங்குமிடங்களை உருவாக்கி, உதவி வருகின்றது பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு.

தற்காலிக முகாம்களில் அடைக்கலம் தேடியுள்ள குடும்பங்கள் தங்கள் விவசாயப் பயிர்களை இழந்துள்ளதால், பெண்களுக்கு தையல்கலையைக் கற்றுக்கொடுத்து குடும்ப வருமானத்திற்கு வழிவகை செய்ய முயன்று வருகிறது, காரித்தாஸ் அமைப்பு.

10 September 2020, 13:30