தேடுதல்

லெபனான் வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி லெபனான் வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி 

லெபனானில் உலகளாவிய காரித்தாசின் பணிகள்

லெபனானில், ஏற்கனவே நிலவும் கடும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்றவற்றோடு கோவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் அதிகம் தேவைப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கு, அரசியல்வாதிகள் மத்தியில், இழுபறி சூழல் உருவாகியுள்ள இவ்வேளையில், துன்புறும் அந்நாட்டினருக்கு, திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தவும், அந்நாட்டிற்குத் தேவையான நிவாரணப் பணிகளை ஒருங்கமைக்கவும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச்செயலர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், அந்நாடு சென்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானின் தலைநகர் பெய்ரூட் சென்றுள்ள ஜான் அவர்கள், வத்திக்கான் செய்தித்துறைக்கு, தொலைப்பேசி வழியே அளித்த பேட்டியில், அந்நகரில் வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியைப் பார்க்கின்றபோது, பெரிய சுனாமி அல்லது, கடும் புயல் இடம்பெற்ற இடம்போன்ற நிலையைக் காணமுடிகின்றது என்றும், அந்த இடத்திற்கு அருகிலுள்ள வீடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

வெடிவிபத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைத் தான் சந்தித்ததாகவும், மக்கள் ஒவ்வொருவரும் கூறிய கதைகளைக் கேட்டபோது, அங்குள்ள நிலவரத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது என்றும், ஜான் அவர்கள் கூறினார்.   

இந்த விபத்தால், ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும், வாடகை வீடுகளில் வாழ்ந்தவர்கள், உரிமையாளர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச்செயலர் கூறினார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதியன்று, பெய்ரூட் நகரின் துறைமுகக் கிடங்கில் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இதில் 200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர், ஏறத்தாழ ஆறாயிரம் பேர் காயமடைந்தனர் மற்றும், 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். 

அதேநேரம், லெபனானில், ஏற்கனவே நிலவும் கடும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் போன்றவற்றோடு கோவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக, அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் அதிகம் தேவைப்படுகின்றன என்று கூறப்படுகின்றது.

18 September 2020, 13:56