தேடுதல்

Vatican News
இயேசு சபை புனிதர் பீட்டர் கிளேவர் (Peter Claver) இயேசு சபை புனிதர் பீட்டர் கிளேவர் (Peter Claver) 

இனவெறி என்ற பாவத்தைக் களைய ஆயர்கள் அழைப்பு

இயேசு சபை புனிதர் பீட்டர் கிளேவர் அவர்களின் திருநாளன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட திருப்பலிகளில், ஆயர்கள், இனவெறியைப் போக்குவது குறித்து தங்கள் மறையுரையில் கூறினர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவும் இனவெறி என்ற பாவத்தை, இறைவனின் அருள்துணையோடு மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பை, அந்நாட்டு ஆயர்கள், செப்டம்பர் 9, இப்புதனன்று நிறைவேற்றிய திருப்பலிகளில் விடுத்தனர்.

அமெரிக்க கண்டத்தில் அடிமைகளாக விற்கப்பட்ட கறுப்பின மக்களிடையே பணியாற்றிய இயேசு சபை புனிதர் பீட்டர் கிளேவர் (Peter Claver) அவர்களின் திருநாள், செப்டம்பர் 9ம் தேதி சிறப்பிக்கப்பட்ட வேளையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட திருப்பலிகளில், ஆயர்கள், இனவெறியைப் போக்குவது குறித்து தங்கள் மறையுரையில் கூறினர்.

செப்டம்பர் 9 - இறைவேண்டல் மற்றும் உண்ணாநோன்பு

அண்மைய மாதங்களில், அமெரிக்க ஐக்கிய நாட்டில், கறுப்பினத்தைச் சேர்ந்த இருவர் காவல்துறையினரால் அடைந்த கொடுமைகளையடுத்து, எழுந்த போராட்டங்களை மனதில் கொண்டு, இனவெறியை நீக்க, மக்கள் அனைவரும் இறைவேண்டல் மற்றும் உண்ணாநோன்பினை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஆயர் பேரவை அழைப்பு விடுத்தது.

‘எனக்கொரு கனவு உண்டு’ என்ற புகழ்பெற்ற உரையை, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் வழங்கிய ஆகஸ்ட் 28ம் தேதி, அல்லது, அடிமைகளின் விடுதலைக்காக உழைத்த புனித பீட்டர் கிளேவர் அவர்களின் திருநாளான செப்டம்பர் 9ம் தேதி, ஆகிய நாள்களில், இந்த இறைவேண்டலையும், உண்ணா நோன்பையும் மேற்கொள்ள, ஆயர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அயலவரில் கிறிஸ்துவைக் காண்பதற்கு...

மற்றவர்களிடம் கடின இதயம் கொண்டிருப்பதால் உருவாகும் வெறுப்பு, புறக்கணிப்பு என்ற பாவங்களைக் குறித்து, தன் மறையுரையில் குறிப்பிட்ட வாஷிங்டன் பேராயர் வில்டன் கிரகரி அவர்கள், நம் அயலவரில் கிறிஸ்துவைக் காண்பதற்கு, புனித பீட்டர் கிளேவர் அவர்களின் பரிந்துரையை நாடுவோம் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இறைவனால் உருவாக்கப்பட்ட யாரையும், நாம், மனித நிலையிலிருந்து குறைத்து மதிப்பிட்டால், அது, நம் மனித இயல்பையே அவமதிப்பதாகும் என்பதை, புனித பீட்டர் கிளேவர் நமக்குச் சொல்லித் தருகிறார் என்று Tyler மறைமாவட்ட ஆயர் Joseph Strickland அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

புனித பீட்டர் கிளேவர் 

1580ம் ஆண்டு, இஸ்பெயின் நாட்டில் பிறந்த பீட்டர் கிளேவர் அவர்கள், தன் 20வது வயதில், இயேசு சபையில் சேர்ந்து, இயேசு சபை புனிதரான அல்போன்ஸ் ரொட்ரிகுவெஸ் அவர்களின் சொற்களால் தூண்டப்பட்டு, மறைபரப்புப்பணிக்கென தன்னையே அர்ப்பணித்தார்.

தென் அமெரிக்க கண்டத்தில் அடிமை வர்த்தகம் பரவியிருந்த வேளையில், புனித பீட்டர் கிளேவர், அடிமைகளாக விற்பனை செய்யப்பட்ட கறுப்பின மக்களிடையே 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, 1654ம் ஆண்டு, தன் 74 வயதில் இறையடி சேர்ந்தார். (CNA)

10 September 2020, 13:54