தேடுதல்

Vatican News
பாலஸ்தீனம், இஸ்ரேல் பாலஸ்தீனம், இஸ்ரேல்   (AFP or licensors)

பாலஸ்தீனம், இஸ்ரேலுக்கு இடையே நேரடி உரையாடலுக்கு...

பாலஸ்தீனம் மற்றும், இஸ்ரேலுக்கு இடையே அமைதி நிலவ வேண்டுமெனில், இவ்விரு நாடுகளுக்கு இடையே நேரடி உரையாடல் இடம்பெறவேண்டியது இன்றியமையாதது - அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்துடன், நல்லுறவுகளை உருவாக்கியதன் ஒரு கட்டமாக, பாலஸ்தீனா நாட்டின் மேற்கு கரையிலுள்ள (West Bank) சில பகுதிகளை, தன்னோடு இணைப்பதை, இஸ்ரேல் அரசு, நிறுத்தி வைக்கத் தீர்மானிருப்பதை வரவேற்றுள்ள அதேவேளை, பாலஸ்தீனா, மற்றும், இஸ்ரேலுக்கு இடையே நேரடி உரையாடல் இடம்பெறவேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் உலகளாவிய நீதி மற்றும், அமைதிப் பணிக்குழுவின் தலைவரான, Rockford ஆயர் David Malloy அவர்கள், ஆகஸ்ட் 20, இவ்வியாழனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனம் மற்றும், இஸ்ரேலுக்கு இடையே அமைதி நிலவ வேண்டுமெனில், இவ்விரு நாடுகளுக்கு இடையே நேரடி உரையாடல் இடம்பெறவேண்டியது இன்றியமையாதது என்று குறிப்பிட்டுள்ளார்.

புனித பூமியில் நீடித்த, நிலையான அமைதி நிலவவேண்டும் என்று, நீண்டகாலமாக ஏங்கும் மக்கள் எல்லாருடனும், கத்தோலிக்க ஆயர்கள் என்ற முறையில், நாங்களும் ஏங்குகின்றோம் என்று, அமெரிக்க ஆயர்கள் சார்பாக, ஆயர் David Malloy அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இம்மாதம் 13ம் தேதி, ஐக்கிய அரபு அமீரகமும், இஸ்ரேலும், தங்களுக்கிடையே தூதரக உறவுகளை உருவாக்கின. இந்த ஒப்பந்தத்திற்கு, எகிப்து, ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகள், தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதன் வழியாக, எகிப்து, ஜோர்டன் ஆகிய இரு நாடுகளுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை உருவாக்கியுள்ள, முதல் வளைகுடா நாடு என்ற பெயரை, ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் மற்றும், ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு ஆதரவான அமைப்பு ஒன்று, இந்த ஒப்பந்தம், அப்பகுதியில், அமைதிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில், வரலாற்று முக்கியத்துவம் பெற்றது என்று கூறியுள்ளது. (CNA)

22 August 2020, 13:38