தேடுதல்

Vatican News
கெனோஷா நகரின் கடை ஒன்றில் வரையப்பட்டுள்ள ஓவியம் கெனோஷா நகரின் கடை ஒன்றில் வரையப்பட்டுள்ள ஓவியம்  (AFP or licensors)

இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கு, நோன்பு, இறைவேண்டல்

1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28, புதன்கிழமையன்று வாஷிங்டன் நகரில் நடைபெற்ற அந்தப் பேரணியின்போது, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், “எனக்கொரு கனவு உள்ளது (I Have a Dream)” என்ற மிகப் புகழ்பெற்ற உரையாற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில் இனவெறிக்கு எதிராக, மாபெரும் பேரணி நடைபெற்றதன் 57ம் ஆண்டு நிறைவான, மார்ச் 28, இவ்வெள்ளியன்று, அந்நாட்டில் இனவெறிப் பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்படுவதற்கு, அனைவரும், உண்ணா நோன்பிருந்து இறைவனை மன்றாடுமாறு, ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாரத்தில் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பதட்டநிலைகளைத் தொடர்ந்து அந்நாட்டில் இனவெறி ஒழிக்கப்படுவதற்கு, இவ்வெள்ளியன்று, அல்லது, புனித பீட்டர் கிளாவரின் திருநாளாகிய வருகிற செப்டம்பர் 9ம் தேதியன்று, உண்ணா நோன்பு மற்றும், இறைவேண்டலை மேற்கொள்ளுமாறு, அந்நாட்டு ஆயர்கள் கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் இனவெறிக்கு எதிராகச் செயல்படும் பணிக்குழுவின் தலைவரான Houma-Thibodaux மறைமாவட்ட ஆயர் Shelton Fabre அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் இனவெறி தொடர்பான பதட்டநிலைகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, அனைவருக்கும் நீதி வழங்கப்படவேண்டும் என்பதை, அமைதியான முறையில் வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.

இனவெறி வழியாக, மனித வாழ்வும், மனித மாண்பும் புறக்கணிக்கப்படுகின்றன, எனவே, கருவில் வளரும் குழந்தையின் வாழ்வு உட்பட அனைவரின் மாண்பும் பாதுகாக்கப்பட நாம் உழைக்கவேண்டும் என்றும், ஆயரின் அறிக்கை கூறுகிறது.

இயேசு சபை புனிதரான பீட்டர் கிளாவர் அவர்கள், 17ம் நூற்றாண்டில், தென் அமெரிக்காவில், ஆப்ரிக்க அடிமைகள் மத்தியில் பணியாற்றி, அடிமைமுறை ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காக உழைத்தவர். 

விஸ்கான்சின் மாநிலத்தின் Kenosha நகரில், ஆப்ரிக்க-அமெரிக்க இனத்தைச் சார்ந்த, 29 வயது நிரம்பிய Jacob Blake என்பவர், காவல்துறையால் சுடப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்நாட்டில் அமைதியான போராட்டங்களும், வன்முறைகளும் இடம்பெற்றுவருகின்றன.

1963ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி, வாஷிங்டன் நகரில் நடைபெற்ற அந்தப் பேரணியின்போது, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், “எனக்கொரு கனவு உள்ளது (I Have a Dream)” என்ற தலைப்பில் மிகப் புகழ்பெற்ற உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA)

28 August 2020, 13:42