தேடுதல்

புலம்பெயர்ந்தோருக்கு வரவேற்பு புலம்பெயர்ந்தோருக்கு வரவேற்பு 

புலம்பெயர்ந்தோர், அரசியல் பிரச்சனை அல்ல

வேறு எந்த காலத்திலும் இல்லாத அளவு, இந்தக் கொள்ளைநோய் காலத்தில், பாதுகாப்பை இழந்து தவிக்கும் புலம்பெயர்ந்த மக்களின் உயிர்களைக் காப்பது நம் கடமை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்தோர், அரசியல் பிரச்சனை அல்ல, மாறாக, அவர்கள் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டிய மனிதர்கள் என்று, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் அவை கூறியுள்ளது.

2015ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, துருக்கி நாட்டின் கடற்கரையில், உயிரற்ற பிணமாக ஒதுங்கியிருந்த மூன்று வயது குழந்தை அலன் குர்தியை (Alan Kurdi) தங்கள் அறிக்கையின் ஆரம்பத்தில் குறிப்பிடும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள், சிறுவன் அலனைப் போல், நம் உதவி தேடி வரும் புலம்பெயர்ந்தோருக்கு, பாதுகாப்பு அளிப்பது நம் கடமை என்று கூறியுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின், பொதுநலப் பணிக்குழுவின் சார்பில், அறிக்கை வெளியிட்டுள்ள திருவாளர் Liam Allmark அவர்கள், தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல் பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரை, அனைத்தையும் இழந்த மனிதர்களாகக் காண்பதற்கு, பிரித்தானிய அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்று, அழைப்பு விடுத்துள்ளார்.

தன் குழந்தைப் பருவத்தில், மியான்மாரில் நிலவிய இராணுவ அடக்குமுறைக்குத் தப்பித்து, குடும்பத்துடன் இலண்டன் மாநகரில் அடைக்கலம் புகுந்ததை இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள Allmark அவர்கள், வேறு எந்த காலத்திலும் இல்லாத அளவு, இந்தக் கொள்ளைநோய் காலத்தில், பாதுகாப்பை இழந்து தவிக்கும் மக்களின் உயிர்களைக் காப்பது நம் கடமை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இராணுவ ஆயுத வர்த்தகத்தில் கவனம் செலுத்தும் பிரித்தானிய அரசு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது, தற்போதைய அவசியம் என்று திருவாளர் Allmark அவர்கள் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2020, 13:34