தேடுதல்

Vatican News
கிழக்கு தீமோரில் கோவிட்-19 தடுப்பு மருந்துகள் கிழக்கு தீமோரில் கோவிட்-19 தடுப்பு மருந்துகள்  (ANSA)

கிழக்கு தீமோரில் கோவிட்-19 கொள்ளைநோயில் வெற்றி

கிழக்கு தீமோர் சமுதாயத்தில், இம்மாதம் 21ம் தேதியின் நிலவரப்படி, ஒருவருக்கு மட்டுமே, இந்நோயின் தாக்கம் இருந்தது. இந்நோயால் இறப்புகள் எதுவும் இடம்பெறவில்லை – அரசின் அறிக்கை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும், சிறிய தீவு நாடான கிழக்கு தீமோரில், கத்தோலிக்கத் திருஅவையின் முயற்சியால், கோவிட்-19 கொள்ளைநோயில் வெற்றி காணப்பட்டுள்ளதாக, யூக்கா செய்தி கூறுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடான கிழக்கு தீமோர் சமுதாயத்தில், இம்மாதம் 21ம் தேதியின் நிலவரப்படி, ஒருவருக்கு மட்டுமே, இந்நோயின் தாக்கம் இருந்ததென்றும், இந்நோயால் இறப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வான், நியுசிலாந்து, ஹாங்காக், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், கொரோனா தொற்றுக்கிருமி பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளவேளை, கிழக்கு தீமோரில் இக்கிருமியின் பரவலை முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

இந்த கொள்ளைநோய் பரவத்தொடங்கிய காலத்திலிருந்து, அரசு மேற்கொண்ட கடும் கட்டுப்பாட்டு விதிமுறைகளும், மக்களின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கும், தேவையான பொருள்களையும், உதவிகளையும் வழங்குவதற்கும் அரசு கையாண்ட நடவடிக்கைளும், வெளிநாடுகளில் வாழ்கின்ற அந்நாட்டினர் ஆற்றிய உதவிகளும், இதற்கு உதவியாக இருந்தன என்று, அரசின் அறிக்கை கூறுகிறது. (UCAN)

இதற்கிடையே, கோவிட்-19 தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அறநெறி காக்கப்படவேண்டும் என்று, ஆஸ்திரேலிய மற்றும், பிரித்தானிய கிறிஸ்தவத் தலைவர்கள் அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.

கருக்கலைப்பு செய்யப்பட்ட மனித திசுக்களைப் பயன்படுத்தி, ஊசிமருந்து கண்டுபிடிக்கப்படும் நடவடிக்கையை குறிப்பிட்டு, இவ்வாறு கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர். (UCAN)

28 August 2020, 13:55