தேடுதல்

Vatican News
உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது - எரேமியா 20:9 உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது - எரேமியா 20:9 

பொதுக்காலம் 22ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

சமுதாய அநீதிகள் என்ற கிருமிகளுக்கு எதிராகக் குரலெழுப்பிய இறைவாக்கினர்களைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்மை அழைக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 22ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

இருபது ஆண்டுகளுக்குமுன், இருபதாம் நூற்றாண்டின் இறுதியை நாம் நெருங்கியவேளையில், அந்த நூற்றாண்டை, பின்னோக்கிப் பார்த்தோம். அந்த நூற்றாண்டைப்பற்றிய ஆய்வுகளும், கருத்துக்கணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.

20ம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட தலைசிறந்த சொற்பொழிவுகளைக் குறித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள Wisconsin-Madison மற்றும் Texas A&M என்ற இரு பல்கலைக் கழகங்களின் ஆய்வாளர்கள் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின் இறுதியில், அந்நாட்டில், கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் வழங்கிய "I have a dream" அதாவது, "எனக்கொரு கனவு உண்டு" என்ற உரையே, தலை சிறந்த உரை என்று கணிக்கப்பட்டது.

1963ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி, சக்திமிக்க அந்த உரை வழங்கப்பட்டதால், அந்நிகழ்வை நினைவுகூர்ந்த இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவும் இனவெறியை இறைவன் குணமாக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், கத்தோலிக்கர் அனைவரும், உண்ணா நோன்பிருந்து இறைவனை மன்றாடுமாறு, அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்தனர். அந்த உரை வழங்கப்பட்டு, 57 ஆண்டுகள் கழிந்தபின்னரும், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கண்ட சமத்துவமும், நீதியும், இன்னும் நிறைவேறாதக் கனவாகவே உள்ளன என்பதை அந்நாட்டில் நிகழ்ந்த கொடுமைகள் நினைவுறுத்தின.

இவ்வாண்டு, மே 25ம் தேதி, மின்னியாபொலிஸ் நகரில், கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் (George Floyd) அவர்கள், காவல் துறையைச் சேர்ந்த ஒருவரால் கழுத்தில் மிதிபட்டு இறந்தது, ஆகஸ்ட் 23ம் தேதி, கடந்த ஞாயிறன்று, கெனோஷா என்ற நகரில், கறுப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் (Jacob Blake) அவர்கள், காவல்துறையினரால் ஏழுமுறை சுடப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது, ஆகிய நிகழ்வுகள், மார்ட்டின் லூத்தர் அவர்கள் கண்ட கனவிலிருந்து வெகு தூரம் விலகி நிற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டை, உலகிற்கு காட்டிவருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஊடகங்களும், சமுதாய வலைத்தளங்களும், சற்று சுதந்திரமாகச் செயல்படுவதால், இச்செய்திகள் உலகெங்கும் பரவியுள்ளன. ஆனால், பல்வேறு நாடுகளில், ஊடகங்களும், சமுதாய வலைத்தளங்களும், வெகுவாக முடக்கப்படுவதால், இத்தகைய அநீதிகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. சமத்துவமின்மை, அநீதி ஆகியவை, அனைத்து நாடுகளிலும், நீக்கமற நிறைந்துள்ள கிருமிகள் என்பதை, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவுறுத்தி வருகிறது.

சமுதாய அநீதிகள் என்ற கிருமிகளுக்கு எதிராகக் குரலெழுப்பிய இறைவாக்கினர்களைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்மை அழைக்கின்றன. "எனக்கொரு கனவு உண்டு" என்ற அந்த உரையை வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இறைவாக்கினர் என்பதை மறுக்கமுடியாது.

1963ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகரான வாஷிங்டனில், ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபத்தின் முகப்பில் நின்றபடி, 36 வயது நிரம்பிய இளம் கிறிஸ்தவப் போதகர் மார்ட்டின் அவர்கள் வழங்கிய உரை, ஒரு மறையுரை அல்ல. அது ஓர் அரசியல் உரை. இருந்தாலும், அவர் வழங்கிய அந்த அரசியல் உரையை, ஒரு மறையுரையைப் போல மக்கள் கேட்டு, ஆமென், ஆமென் என்று அடிக்கடி சொல்வதை, வீடியோப் பதிவுகளில் நாம் காணமுடிகிறது.

இறைவாக்கினர்கள் எசாயா, ஆமோஸ் ஆகியோர் கண்ட கனவுகளைத் தன் கனவுடன் இணைத்து, மார்ட்டின் அவர்கள் வழங்கிய அந்த உரையை, அங்கு கூடியிருந்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரவாரமாய் வரவேற்றனர். அந்த உரையைத்தொடர்ந்து, அமெரிக்காவில், கறுப்பின மக்களுக்கு சமஉரிமைகள் வேண்டும் என்ற போராட்டம், உச்சநிலையை அடைந்தது. மார்ட்டின் அவர்கள் வழங்கிய அந்த உரை, ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பல கோடி மக்களை சென்றடைந்துள்ளது. அவர்கள் மனதை சமத்துவ சமுதாயம் நோக்கி நடத்திச் சென்றுள்ளது.

ஆனால், மார்ட்டின் அவர்கள் வழங்கிய அந்த உரை, எல்லா மக்களையும் மகிழ்விக்கவில்லை. அந்த உரையைக் கேட்ட பலர், தங்கள் தூக்கத்தை, நிம்மதியை இழந்தனர். சமத்துவக் கனவை மக்கள் மனதில் விதைத்த மார்ட்டின் அவர்கள் தொடர்ந்து வாழ்ந்தால், வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்திற்கு பெரும் ஆபத்து என்று அவர்கள் நினைத்தனர். 36ம் வயதில் கறுப்பின மக்களிடையே நம்பிக்கையை வளர்த்த மார்ட்டின் அவர்கள், 37வது வயதில் உலக அமைதிக்கென வழங்கப்படும் நொபெல் விருதைப் பெற்றார். ஈராண்டுகள் சென்று, 39வது வயதில், சுட்டுக்கொல்லப்பட்டார். இறைவாக்கினர் எவரும், இவ்வுலகின் வெற்றிகளைக் குவித்ததாக, நிம்மதியாக வாழ்ந்ததாக, வரலாறு கிடையாது.

இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், அதிகாரம் என்ற போதையில் மூழ்கியிருக்கும் தலைவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் இறைவாக்கினர்கள் கொடூர மரணங்களுக்கு உள்ளாயினர் என்பதை வரலாறு பலமுறை நமக்கு உணர்த்தியுள்ளது. இவர்களின் ஒரு முன்னோடியாக, நாம், புனித திருமுழுக்கு யோவானை எண்ணிப்பார்க்கலாம். மன்னன் ஏரோதின் தவறைச் சுட்டிக்காட்டிய யோவானின் தலை வெட்டப்பட்ட நாளை, ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமை சிறப்பித்தோம்.

தன் சொல், செயல், அனைத்தின் வழியாகவும், தீமையைச் சுட்டெரிக்கும் சுடராக வாழ்ந்த திருமுழுக்கு யோவானைப்போல், பல்லாயிரம் இறைவாக்கினர்கள், வரலாற்றில் ஒளிர்ந்துள்ளனர். அந்த வரிசையில், 20ம் நூற்றாண்டு இறைவாக்கினர்களில் ஒருவராக, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களை நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இறைவாக்கினராக வாழ்வது எளிதல்ல என்பதையும், எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காக உயிர் தியாகம் உட்பட, பல தியாகங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், மார்ட்டின் அவர்கள் உணர்ந்திருந்தார். "ஒரு கொள்கைக்காக இறக்கத் துணியாதவன், வாழவே தகுதியற்றவன்" என்பது, மார்ட்டின் அவர்களின் புகழ்பெற்ற ஒரு கூற்று.

இறைவாக்கினர்கள் பலர், இறைவன் வழங்கிய கொள்கைகளை தங்கள் வாழ்வில் பின்பற்றியவர்கள். அக்கொள்கைகளைவிட்டு விலகி வாழ்ந்த சமுதாயம் சரியில்லை என்பதை, துணிவுடன் எடுத்துச்சொல்லும் பணியை, இறைவன் அவர்களுக்கு அளித்தார். விவிலியத்தில் நாம் சந்திக்கும் ஒரு சில இறைவாக்கினர்கள், இறைவன் அளித்த இந்த ஆபத்தான பணியை ஏற்க மறுத்து, ஓடி ஒளிந்தனர். ஆனாலும், அந்தப் பணியை நிறைவேற்றும்வரை, இறைவன் அவர்களை விடவில்லை. இப்படி தன்னை இடைவிடாமல் துரத்திவந்த இறைவனிடம், இறைவாக்கினர் எரேமியா பேசுவதை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்கிறோம். - இறைவாக்கினர் எரேமியா 20: 7-9

“நான் வாயைத் திறந்தாலே உண்மைகளைச் சொல்லவேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச் சொல்லவேண்டியுள்ளது. ‘எனக்கு ஏன் வம்பு’ என்று, பேசாமல் இருந்தாலும், உமது வார்த்தைகள், என் மனதில், நெருப்பாய் எரிந்துகொண்டிருக்கின்றன” என்று, ஆண்டவரிடம் முறையிடுகிறார் எரேமியா. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்த எரேமியாவைப்போல, பலகோடி இறைவாக்கினர்கள் எண்ணியிருப்பர், சொல்லியும் இருப்பர்.

இத்தகையைச் சூழலில், நம்மில் பலர், மௌனம் காப்பதே சிறந்த வழி என்று எண்ணுவது இயல்பு. மௌனம் காக்க முடிவெடுப்போரைக் குறித்து, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கூறிய ஒரு கூற்று, நினைவில்கொள்ளத்தக்கது:

“சமுதாய மாற்றத்தை நோக்கிச்செல்லும் இக்காலத்தின் மிகப்பெரும் வேதனை என்னவென்று சிந்தித்தால், அது, தீமைகளைச் செய்யும் ஒரு சிலரது கூப்பாடு அல்ல... நல்லவர்களின் அதிர்ச்சியூட்டும் அமைதியே, பெரும் வேதனைதரும் காரியம்.” மார்ட்டின் அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள், இன்றும், பொருள் உள்ளவைகளாகத் தெரிகின்றன.

மௌனம் காப்பதே சிறந்த வழி என்று நம்மில் பலர் நினைப்பதைக் குறித்து, Elie Weisel என்ற யூத எழுத்தாளர் கூறும் சொற்கள், கூர்மையாக நம் உள்ளங்களில் பதிகின்றன: "எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டிய வேளையில் மௌனம் காத்து, பாவம் புரிவது, நம் அனைவரையும் கோழைகளாக்குகிறது".

மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், தன் புகழ்பெற்ற உரையை வழங்கிய அதே 1963ம் ஆண்டு, அமெரிக்க அரசுத்தலைவராக இருந்த ஜான் F.கென்னடி அவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையைத் தொடர்ந்து நடந்த ஒரு வழக்கை மையப்படுத்தி JFK என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. மக்கள் காக்கும் மௌனத்தைப்பற்றி, Weisel அவர்கள் கூறிய சொற்கள், இத்திரைப்படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றுகின்றன.

அரசுத்தலைவர் ஜான் F.கென்னடி அவர்களைக் கொன்றது, தனியொரு மனிதர் அல்ல, அவருக்குப் பின்புலத்தில் சதிகாரக் கும்பல் ஒன்று செயல்பட்டது என்பதை, நீதிமன்றத்தில் நிரூபிக்க, வழக்கறிஞர் ஜிம் கேரிசன் (Jim Garison) என்பவர் வாதிடும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. கேரிசன் அவர்களின் வேடத்தில் நடிப்பவர், ஒரு காட்சியில் பேசும் வசனம், இன்றைய நம் சிந்தனைகளுக்கு, குறிப்பாக, நாம் வாழும் இந்த கொள்ளைநோய் காலத்திற்கு, கூடுதலான அர்த்தம் வழங்குகின்றது:

"உண்மையைச் சொல்வது, சிலநேரங்களில் நம்மை அச்சுறுத்துகிறது. அரசுத்தலைவர் கென்னடி அவர்களையும் அது அச்சுறுத்தியது. ஆனால், அவர் துணிவுள்ளவராக இருந்தார். உன்னை நீயே அச்சத்திற்குள் அடைத்துக்கொண்டால், தீயோர் இந்த நாட்டை அபகரிப்பதற்கு நீ வழிவகுக்கிறாய். அதன் பின், எல்லாருமே அச்சத்தில் வாழவேண்டியுள்ளது" என்று கேரிசன் அவர்கள் நீதிமன்றத்தில் கூறுவார்.

நாம் வாழும் கொள்ளைநோய் காலத்தில், அச்சுறுத்தல் என்ற யுக்தி, எவ்விதம் ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதை நாம் உணர்கிறோம். கோவிட்-19 தொற்றுக்கிருமியைப்பற்றி, குழப்பமான, முரணான கருத்துக்களையும், அந்தத் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையையும், ஒவ்வொருநாளும் வெளியிட்டு, மக்களை அச்சத்தில் அடைபட்டுக்கிடக்க வைத்துவிட்டன, அரசுகளும், ஊடகங்களும். இந்த அச்சத்தையும், அதனுடன் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அநீதியான சட்டங்களையும், அடக்குமுறைகளையும் மக்கள் மீது திணித்துவரும் பல அரசியல் தலைவர்களை, அண்மைய ஆறு மாதங்களில் உலகின் பல நாடுகளில் கண்டுவருகிறோம்.

இந்த உலகம் நம்மீது திணிக்கவிரும்பும் அநீதிகளுக்கு துணைபோகும்போது, இவ்வுலகம் நம்மை பாராட்டும், நாம் உலகையே வென்றதுபோன்ற உணர்வையும் தரும். அதற்கு மாறாக, நம் மனசாட்சி சொல்வதைக் கேட்டு வாழும்போது, போராட்டங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும், அந்தப் போராட்டத்தில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களைப்போல், மகாத்மா காந்தியைப்போல், உயிரையும் வழங்கவேண்டியிருக்கும். இந்த சவாலை, இயேசு, இன்றைய நற்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்:

மத்தேயு நற்செய்தி 16: 26

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

இந்தக் கொள்ளைநோயோடு வாழ்வதற்கும், கொள்ளைநோயை வெல்வதற்கும் நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் ஒரு முக்கியப் பகுதியாக, கொள்ளைநோய் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டங்கள் தவறு என்பதை எடுத்துச்சொல்லும் இறைவாக்கினர்கள், துணிவுடன் வெளிவரவேண்டும் என்று சிறப்பான முறையில் மன்றாடுவோம்.

ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமையன்று, நலம் வழங்கும் ஆரோக்கிய அன்னையின் திருத்தலங்கள் அனைத்திலும் கொடியேற்றப்பட்டு, நவநாள் பக்தி முயற்சிகள் துவங்கியுள்ளன. இந்த அன்னையின் பரிந்துரையால் நம்மைச் சூழ்ந்திருக்கும் கோவிட்-19 கொள்ளைநோயும், இன்னும், நம் உலகை பல காலமாகச் சூழ்ந்து வதைக்கும் அநீதிகள், பாகுபாடுகள் ஆகிய கொள்ளைநோய்களும் நம்மைவிட்டு நீங்கவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.

இறைவாக்கினராக வாழ, ஒவ்வொருநாளும், பல வடிவங்களில் நமக்கு வரும் அழைப்புக்களை ஏற்க, இறைவன் நமக்கு அருளையும், துணிவையும் வழங்குவாராக!

29 August 2020, 13:23