தேடுதல்

"விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்" - மத்தேயு 16:19 "விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்" - மத்தேயு 16:19 

பொதுக்காலம் - 21ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

அதிகாரத்தின் உண்மையான இலக்கணத்தைப் புரிந்துகொள்ள, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நமக்குச் சவால் விடுக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 21ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

கண்ணுக்கும், கருத்துக்கும் புலப்படாத ஒரு நுண்கிருமி, கடந்த எட்டு மாதங்களாக, இவ்வுலகை, பெருமளவு ஆக்ரமித்துள்ளது. இந்தக் கிருமி, இனி நம்முடன் இருக்கத்தான் போகிறது என்பதை, நாம் உணரத் துவங்கியுள்ளோம். இவ்வேளையில், இக்கிருமியினால் உருவான கொள்ளைநோயைத் தாண்டி, நாம் எப்படி வாழப்போகிறோம் என்பதைப்பற்றிச் சிந்திக்கும் தருணத்தில் இருக்கிறோம்.

இந்தக் கொள்ளைநோயினால் காயமுற்றிருக்கும் மனித குடும்பம், இனிவரும் நாள்களில் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் குறித்து, அரசியல், சமுதாய, மற்றும், ஆன்மீகத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதைக்குறித்து, ஆகஸ்ட் 19, கடந்த புதனன்று, தன் மறைக்கல்வி உரையில், சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்:

"உலகளாவிய இக்கொள்ளைநோய்க்கு நமது பதிலிறுப்பு இரு வழிகளில் அமையவேண்டும்: இந்த உலகை முழந்தாள்படியிட வைத்துவிட்ட நுண்ணிய கிருமியிலிருந்து குணமடையும் வழியைக் கண்டுபிடிக்கவேண்டும்; அதேவேளை, சமுதாய அநீதி என்ற பெரும் கிருமியிலிருந்தும் நாம் குணம்பெறவேண்டும்... கொள்ளைநோய்க்குப்பின் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவதை அனைவரும் விரும்புகிறோம். ஏற்றத்தாழ்வுகளும், அநீதியும் நிறைந்த சமுதாய வாழ்வுக்கும், சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் திட்டங்களுக்கும் திரும்புவது, இயல்பு நிலை அல்ல" என்பதைத் தெளிவாகக் கூறினார் திருத்தந்தை. இந்தக் கொள்ளைநோயை எதிர்க்கும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகள் உலகெங்கும் நடைபெறுவதால், அந்த ஆய்வு முயற்சிகளை, தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பேசினார் திருத்தந்தை:

"இன்றையைப் பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டுவரும் திட்டங்கள், மக்களை, குறிப்பாக, வறியோரை மையப்படுத்தி அமைந்திருக்கவேண்டும். இந்த நோயைத் தடுக்கும் மருந்துகள், யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களைச் சென்றடையவேண்டும். இந்தத் தடுப்பு மருந்து, முதன்முதலாக, செல்வந்தர்களை அடையவேண்டும் என்று திட்டமிடுவது, பெரும் வேதனையான விடயம். இந்தத் தடுப்பு மருந்து, உலகமனைத்திற்கும் உரிய சொத்து என்று எண்ணாமல், குறிப்பிட்ட நாடுகளின் தனியுரிமைச் சொத்து என்று எண்ணிப்பார்ப்பது, பெரும் வேதனையாக இருக்கும்."

இந்தக் கொள்ளைநோயைத் தொடர்ந்துவரும் காலங்களில், சமத்துவமும், நீதியும் நிறைந்த ஒரு சமுதாயம் உருவாகவும், சுற்றுச்சூழலைச் சீரழிக்காத திட்டங்கள் உருவாகவும், இவ்வுலகின் மீது அக்கறைகொண்ட பலர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப்போல், கனவுகண்டு வருகின்றனர். ஆனால், அந்தக் கனவுகளையெல்லாம் கேலிக்குள்ளாக்கும்வண்ணம், ஒரு சில நாட்டுத் தலைவர்கள், சமுதாய நீதிக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிராக, திட்டங்களை நிறைவேற்றி வருவதைக் காண்கிறோம்.

இமயமலையிலும், சீனப் பெருங்கடலிலும் சீன அரசு மேற்கொண்டுவரும் அத்துமீறல்கள், துருக்கி நாட்டிலிருந்த கிறிஸ்தவப் பேராலயத்தை, இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றிய முடிவு, கொள்ளைநோய் காலத்தில், இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வு, சுற்றுச்சூழலுக்கும், கல்விக்கும் பாதகம் விளைவிக்கும் வகையில் இந்தியாவில், உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள்... ஆகியவை, அதிகாரத்தை, தவறாகப் பயன்படுத்துவதன் ஒரு சில வெளிப்பாடுகள்!

கோவிட் 19 கிருமி, மனித உயிர்கள் மீது கொண்டுள்ள தணியாத்தாகத்தையும் விஞ்சும் அளவு, உலகத் தலைவர்கள் பலர், கடந்த ஆறு மாதங்களில், அதிகாரத்தாகத்தை அளவின்றி வளர்த்துக் கொண்டுள்ளதை நாம் காண்கிறோம். சீனா, இந்தியா, இலங்கை, இஸ்ரேல், இரஷ்யா, பிலிப்பீன்ஸ், ஹங்கேரி, அமெரிக்க ஐக்கிய நாடு.... இறுதியாக, பெலாருஸ் என, பல நாடுகளில், அதிகாரத்தில் இருப்போர், பல்வேறு வழிகளில், மக்கள் மீது, அடக்குமுறைகளை, நேரடியாகவும், மறைமுகமாகவும் காட்டிவருகின்றனர். தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், மக்கள், எவ்வித எதிர்ப்பையும் காட்டஇயலாமல் அடைபட்டிருக்கும் நிலையை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இத்தலைவர்களின் செயல்பாடுகள், 'அதிகாரம்' என்ற சொல்லுக்கு தவறான இலக்கணங்கள்!

இத்தகையச் சூழலில், அதிகாரத்தின் உண்மையான இலக்கணத்தைப் புரிந்துகொள்ள, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நமக்குச் சவால் விடுக்கின்றன. ஒருவருக்கு அதிகாரம் தரப்படுவதை, இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் இன்றைய வாசகங்களில் விவரிக்கின்றனர்.

பதவியிலிருந்த செபுனா என்ற அதிகாரி, அகந்தை கொண்டு, தன் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாததால், அவரை அதிகாரத்திலிருந்து நீக்கிவிட்டு, எலியாக்கிம் என்பவரை இறைவன் உயர்த்துவதை, இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுகிறார். திருஅவையின் முதல் தலைவராக, புனித பேதுருவை, இயேசு அறிவிப்பதை, நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுகிறார்.

எலியாக்கிமுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை, பல்வேறு உருவகங்கள் வழியே இறைவன் விவரிக்கிறார். இதோ அப்பகுதி:

எசாயா 22: 20-22

அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன்... அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்: எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்: எவனும் திறக்கமாட்டான்.

அங்கி, கச்சை, தாவீது குடும்பத்தாரின் திறவுகோல் என்ற பல அடையாளங்கள் வழியே எலியாக்கிமின் அதிகாரம் வரையறுக்கப்படுகிறது.

அங்கி, கச்சை ஆகியவை, ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் உடுத்திக் கொள்வன. அவை, ஒருவரோடு நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. அதேபோல், ஒருவருக்கு வழங்கப்படும் அதிகாரமும், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட நோக்கத்திற்காக, மக்களால் வழங்கப்படுவது. இன்றைய உலகிலோ, பல தலைவர்கள், அதிகாரத்தை, தங்கள் உரிமைச் சொத்தாகக் கருதுவதும், ஒரு சிலர், தங்கள் வாழ்நாள் முழுவதும் தலைவராக தங்களை மாற்றிக்கொள்வதும், அதிகாரம், பொறுப்பு என்ற சொற்களுக்கு முரணான போக்குகள்.

அதேபோல், அதிகாரம், ஒரு திறவுகோல் போன்றது. அது, மூடப்பட்டுள்ள கதவுகளைத் திறந்து, மக்களுக்கு நன்மைகளை வழங்க பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக அமையவேண்டும். இன்றைய நற்செய்தியில், இயேசு, பேதுருவுக்கு வழங்கும் பொறுப்பை, 'திறவுகோல்' என்ற அடையாளத்தைக் கொண்டு குறிப்பிடுவதைக் காணலாம்: "விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" (மத்தேயு 16:19) என்ற சொற்கள் வழியே, மண்ணுலகையும், விண்ணுலகையும் இணைக்கும் சக்திபெற்ற திறவுகோலான அதிகாரத்தை, இயேசு, பேதுருவுக்கு வழங்குகிறார்.

எலியாக்கிமுக்கு இறைவன் வழங்கும் அங்கி, கச்சை, திறவுகோல் என்ற அடையாளங்களைத் தொடர்ந்து, இறைவன் பயன்படுத்தும் இரு உருவகங்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. அதிகாரத்தில் உள்ள ஒருவரை, இறைவன் எவ்விதம் உருவாக்குகிறார் என்பதை, இவ்விரு உருவகங்களும் தெளிவாக்குகின்றன:

எசாயா 22:23

உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்.

இஸ்ரயேல் குலத்தின் தலைவனை, இறைவன், உறுதியான இடத்தில் முளைபோல் அடித்துவைப்பார் என்ற சொற்கள், அதிகாரத்தில் இருப்போரிடம் விளங்கவேண்டிய சில அம்சங்களை விளக்குகின்றன. உறுதியான நிலத்தில் அடிக்கப்படும் முளை, பல வழிகளில் பயன்படுகிறது. பூமிக்குள் அழமாக ஊன்றப்பட்ட முளையில் கயிறுகட்டி, கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. எவ்வளவு பலமாகக் காற்றடித்தாலும், அழமாக ஊன்றப்பட்ட முளை, கூடாரத்தைக் காப்பாற்றும். காக்கும் தொழிலைச் செய்யும் முளைபோல, அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் முக்கியமான பணி, காக்கும் பணி என்பதை, இவ்வுருவகம் முதலில் நமக்கு உணர்த்துகிறது.

அத்துடன், உறுதியான இடத்தில் ஒரு முளையை ஊன்றுவதற்கு, அது, தன் தலைமீது அடிகளைத் தாங்கவேண்டும். எவ்வளவு வலிமையாக அடிகள் விழுகின்றனவோ, அவ்வளவு ஆழமாக முளை பூமிக்குள் புதைந்து, பலன் தரும் வகையில் நிற்கமுடியும். அதேபோல், தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள்மீது விழும், பல அடிகளைத் தாங்கிக்கொண்டு, உறுதியுடன் நின்றால், பயனுள்ள தலைவர்களாகச் செயல்படமுடியும்.

அடுத்ததாக, இறைவன் பயன்படுத்தும் மேன்மையுள்ள அரியணை என்ற உருவகமும் தலைவனுக்குரிய ஒரு பண்பை விளக்குகிறது. அரியணையை யாரும் சுமப்பது கிடையாது; அதுவே மற்றவர்களைச் சுமக்கிறது. அது மற்றவர்களைத் தாங்கும்போதுதான், பயனும், புகழும் பெறுகிறது. அதேபோல், தலைவர்களும் மற்றவர்களைத் தாங்கும்போதுதான், பயனும், புகழும் பெறுகின்றனர்.

முளைபோல் அடித்துவைக்கப்பட்டாலும், அரியணையாக அடுத்தவரைத் தாங்கி நின்றாலும், சீரான மனநிலையுடன் செயல்படும் தலைவர்கள், தலைமைத்துவம், அதிகாரம் என்ற சொற்களுக்கு ஆழ்ந்த அர்த்தங்கள் தருகின்றனர். அத்தகையச் சீரான மனநிலையைப் பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக நான் கருதுவது, அத்தலைவர்கள் தங்களைப்பற்றி கொண்டுள்ள தெளிவான புரிதல் அல்லது, 'சுய அறிவு' (self knowledge). ஒருவர் தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள, தன்னையே சரியாகப் புரிந்துகொள்ள, சுயத்தேடல்கள் நிகழவேண்டும். இத்தகைய ஒரு தேடலை, இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.

ஒவ்வொருவரும், வாழ்க்கையில், நம்மை நாமே தேடிய அனுபவங்கள், நம் எல்லாருக்கும் உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில், பல கேள்விகள், நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அவற்றில் மிக முக்கியமாக நம் மனதில் எழும் ஒரு கேள்வி... 'நான் யார்?' என்ற கேள்வி.

இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. நான் யார் என்ற தேடலை அடிப்படையாகக் கொண்டு இயேசு எழுப்பிய இரு கேள்விகள், அன்று, சீடர்களுக்கும், இன்று, நமக்கும் சவாலாக அமைந்துள்ளன. "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பன, அவ்விரு கேள்விகள்.

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு, சிறு வயது முதல், அம்மாவிடம், அப்பாவிடம், மறைகல்வி ஆசிரியர்களிடம் நாம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, பதில்கள் சொல்லிவிடலாம். ஆனால், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. நாம் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே, இந்தக் கேள்விக்குப் பதிலாக அமையவேண்டும். நாம் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே, இந்தக் கேள்விக்கு சரியானப் பதிலைத் தரமுடியும்.

இயேசுவைப்பற்றி தெரிந்துகொள்ள, பல்லாயிரம் புத்தகங்கள் உள்ளன. அந்தப் புத்தகங்களில் திரட்டிய அறிவால் நாம் நிறைந்திருக்கும்போது, இயேசு நம்மிடம், "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நாம் மனப்பாடம் செய்த பதில்கள், மடைதிறந்த வெள்ளமாகப் பாயும். ஆனால், அந்த மனப்பாடங்களோடு மட்டும் நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரிந்தியர் 13:1)

எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்புதான், "நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத்தேயு 16:15) என்ற கேள்வியாக எழுகிறது. இது வெறும் கேள்வி அல்ல, ஓர் அழைப்பு. இயேசுவை நம்பி அவரோடு, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, அவர் தரும் ஓர் அழைப்பு.

இயேசு தந்த அந்த அழைப்பை, புரிந்தும் புரியாமலும், புனித பேதுரு, தன் உள்ளத்தில் உணர்ந்த ஓர் உண்மையை எடுத்துரைக்கிறார். “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” (மத்தேயு 16:16) என்று அறிக்கையிடுகிறார். அறிவுத்திறனால் அல்ல, மனதால் தன்னை புரிந்துகொண்ட பேதுருவைப் புகழும் இயேசு, திருஅவையின் முதல் தலைவராக அவரை நியமிக்கிறார்.

திருஅவையின் 266வது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இயேசுவை, தன் அறிவால் உணர்ந்ததைவிட, உள்ளத்தால் அதிகம் உணர்ந்தவர் என்பதை, நமக்கு பலவழிகளில் உணர்த்திவருகிறார். தன்னைப் புரிந்துகொண்ட பேதுருவை, திருஅவைத் தலைவராக அறிவித்து, இயேசு, அவரை வழிநடத்தியதுபோல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், நல்ல உடல், உள்ள நலத்துடன் வழிநடத்த வேண்டுமென்று, இறைவனை உருக்கமாக மன்றாடுவோம்.

மக்களை வாட்டும் கொள்ளைநோய் காலத்தையும், தங்கள் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் பல நாடுகளின் தலைவர்கள், மக்களால் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, மக்களுக்கு நன்மைகள் செய்யும் பொறுப்பான ஒரு பணி என்று புரிந்துகொள்ளவும், அந்த உணர்வுடன் செயல்படவும், இறைவனின் அருளை வேண்டுவோம்.

22 August 2020, 12:44