தேடுதல்

கானானியப் பெண் ஒருவர் இயேசுவிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்" எனக் கதறினார். - மத்தேயு  15:22 கானானியப் பெண் ஒருவர் இயேசுவிடம் வந்து, "ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்" எனக் கதறினார். - மத்தேயு 15:22 

பொதுக்காலம் 20ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, இயேசு வலியுறுத்தியபோது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணை உண்டு என்பதை, ஆணித்தரமாக உணர்த்தியது கானானியப் பெண்ணின் நம்பிக்கை.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 20ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

கடந்த ஞாயிறு, The New York Times நாளிதழில் வெளியான ஒரு செய்தியுடன் நம் சிந்தனைகளைத் துவங்கினோம். அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்குக் கடற்கரையில் புயல், மேற்குக் கடற்கரையில் தீ, இடைப்பட்ட நாட்டில் கொள்ளைநோய் என்று அச்செய்தியில் கூறப்பட்டிருந்த உருவகம், உலகின் பல நாடுகளுக்கும் பொருந்தும் என்ற கோணத்தில் சிந்தித்தோம்.

இந்த ஞாயிறு, The Guardian என்ற நாளிதழில் வெளியான ஒரு செய்தி, நம் சிந்தனைகளைத் துவக்கிவைக்கிறது. இந்தச் செய்தியும், எல்லா நாடுகளிலும் பரவிவரும் ஓர் அரசியல் தந்திரத்தை வெளிச்சத்திற்குக் கொணர்கிறது. "Don't be fooled by the myth of 'migrant invasion'" - அதாவது, "'குடிபெயர்ந்தோரின் படையெடுப்பு' என்ற கட்டுக்கதையால் ஏமாற்றப்படவேண்டாம்" என்பது, இச்செய்தியின் தலைப்பு. இச்செய்திக் கட்டுரையின் ஆரம்ப வரிகள், இன்றைய அரசியலைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, இந்த ஞாயிறு வழிபாட்டின் வாசகங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கின்றன.

"ஒரு நாடு, மற்றொரு நாட்டிற்குள், அனுமதியின்றி, தன் இராணுவ வலிமையுடன் நுழைவதே, படையெடுப்பாகும். தங்கள் நாடுகளில் நிகழும் ஆக்ரமிப்பு, தாக்குதல் ஆகியவற்றிலிருந்து தப்பித்து, ஏனைய நாடுகளில் அடைக்கலம் தேடிச்செல்லும் சிறு, சிறு குழுவினரின் வருகை, படையெடுப்பு அல்ல. இருப்பினும், பிரித்தானிய அரசியல், குடிபெயர்ந்தோரின் வருகையை, 'படையெடுப்பு' என்ற சொல்லால் வர்ணித்து, மக்கள் உள்ளங்களில் அச்சத்தை உருவாக்குகின்றது" என்று, இக்கட்டுரையின் ஆரம்ப வரிகள் கூறுகின்றன.

பிரித்தானிய அரசியல் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இந்த அரசியல் தந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். அதிலும், அண்மைய ஒரு சில ஆண்டுகளாக, இந்தத் தந்திரத்தை, ஓட்டுவாங்கும் மந்திரமாகவும், பல அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான குடியுரிமை திருத்தச் சட்டம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு எல்லையில் எழுப்பப்பட்டுவரும் சுவர் ஆகியவை, குடிபெயர்ந்தோரை ஆபத்தானவர்களாகக் காட்டும் அரசியல் தந்திரத்தின் அவலமான அடையாளங்கள்.

அந்நியரை ஆபத்தாகக் கருதும் சிந்தனை, இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து, நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும், இல்லத்திலும் நுழைந்துவிட்டது. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும், கோவிட் கிருமியைச் சுமந்துவரும் ஓர் ஆபத்தாகக் காண்பதற்கு, மருத்துவ உலகமும், ஊடகங்களும் நம்மைப் பழக்கப்படுத்திவிட்டன.

ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தில் வேரூன்றியிருந்த வரவேற்பும், விருந்தோம்பலும், கடந்த ஆறு மாதங்களாக, காணாமல் போய்விட்டன. சமுதாயத்தில் ஏற்கனவே உருவாகியிருந்த பிரிவுகளை, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, இன்னும் ஆழப்படுத்திவிட்டது.

நீ, நான்... நீங்கள், நாங்கள்... நாம், அவர்கள்... நாம், அந்நியர்கள்... என்று பாகுபாடுகள், வளர்ந்து வருவதால், மோதல்களும், கலவரங்களும் பெருகிவருகின்றன. பிரிவுகளாலும் பிளவுகளாலும் காயப்பட்டிருக்கும் இந்த உலகிற்கு இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி இதுதான்:

இறைவாக்கினர் எசாயா 56: 1,6-7

ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்: நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது: நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்: இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்: அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்: ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்.

பிற இன மக்களும் இஸ்ரயேல் மக்களுடன் இறைவனின் ஆலயத்தில் இணையமுடியும் என்று இறைவன் உறுதியளிக்கிறார். தேனாக நம் காதுகளில் பாய்கின்றன, இறைவனின் உறுதி மொழிகள்.

விவிலியத்தின் பல இடங்களில் காணக்கிடக்கும் இத்தகைய உறுதிமொழிகள், கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, ஏனைய மதத்தவருக்கும், மன நிறைவையும், நம்பிக்கையையும் தந்துள்ளன. அவர்களில் ஒருவர், மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்காவில், வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த காந்தி அவர்கள், விவிலியத்தை, முக்கியமாக, நற்செய்தியை, ஆழமாக வாசித்தபின், ஒரு தீர்மானத்திற்கு வந்தார். சாதியக்கொடுமைகளில் சிக்கித்தவித்த இந்தியாவுக்கு, கிறிஸ்தவமே விடுதலைத் தரும் சிறந்த வழி என்று அவர் தீர்மானித்தார். ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினார்.

தன் விருப்பத்தை, நடைமுறைப்படுத்தும் எண்ணத்துடன், அவர், ஒரு ஞாயிறன்று, கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில், ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர், காந்தியைக் கண்டதும், அவருக்கு அந்தக் கோவிலில் இடம் இல்லை என்றும், வெள்ளையர் அல்லாதோருக்கென அடுத்த வீதியில் உள்ள கோவிலுக்கு அவர் செல்லவேண்டும் என்றும் கூறினார். அன்று, அந்தக் கிறிஸ்தவக் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காந்தி அவர்கள், மீண்டும் அக்கோவில் பக்கம் திரும்பவேயில்லை. “கிறிஸ்தவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் உண்டெனில், நான் ஓர் இந்துவாக இருப்பதே மேல்" என்று, அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

பிரிவுகளை வலியுறுத்தும் தடைகளைத் தாண்டி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் நற்செய்தி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண், நமக்கு நம்பிக்கை தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித்தருகிறார். தாழ்த்தப்பட்ட இனம், அவ்வினத்தில் பிறந்த ஒரு பெண், தீயஆவி பிடித்த மகளுக்குத் தாய் என்று, அடுக்கடுக்காக, சுமத்தப்பட்ட பல தடைகளை, துணிவுடன் தாண்டி, அப்பெண், இயேசுவை அணுகிவருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம், மீண்டும், மீண்டும், அவர் வருகிறார்.

இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்து, இயேசு, அப்பெண்ணிடம் கூறும் கடுமையான சொற்கள், நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. இயேசு, அந்தப் பெண்ணின் நம்பிக்கையை சோதிக்கவே இவ்வாறு பேசினார் என்று, நாம் காரணங்கள் கூறினாலும், இயேசு இவ்வாறு பேசியது, நமக்குள் நெருடலை உருவாக்குகிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தான் வாழ்ந்த சமுதாயத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு எண்ணங்களை உள்வாங்கியிருந்த இயேசுவுக்கு, அப்பெண் பாடம் புகட்டினார் என்ற கோணத்திலும், இந்நிகழ்வை நாம் சிந்திக்கலாம். இயேசுவுக்கு பாடம்புகட்டிய அந்தத் தாயின்பக்கம் நம் கவனத்தைத் திருப்புவோம்.

தன் மகளை எப்படியாகிலும் குணமாக்கிவிடவேண்டும் என்ற ஒரே  குறிக்கோளுடன்... அதை, ஒருவகையான வெறி என்றுகூடச் சொல்லலாம்... அத்தகைய வெறியுடன், அப்பெண், இயேசுவைத் தேடி வந்திருந்ததால், அவர் கூறிய கடினமான சொற்களையும், தனக்கு உதவும்வண்ணம், நேர்மறையான கண்ணோட்டத்துடன் புரிந்துகொண்டு, அந்தத் தாய், தன் விண்ணப்பத்தை மீண்டும், மீண்டும் இயேசுவிடம் விடுக்கிறார்.

இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை, இயேசு வலியுறுத்திக் கூறியபோது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணை உண்டு என்பதை, ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணின் நம்பிக்கை, நமக்கு பாடமாக அமைகிறது.

பெண்கள், குறிப்பாக, அன்னையர் கொண்டிருக்கும் நம்பிக்கை, அசாத்தியமானது என்பதை நாம் அறிவோம். சில மாதங்களுக்கு முன், தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான ஒரு செய்தி, ஓர் ஏழைத்தாயின் அசைக்கமுடியாத உறுதியையும், நம்பிக்கையையும் வெளிக்கொணர்ந்தது. தமிழ் நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மாவதி என்ற அத்தாயைக் குறித்து வெளியானச் செய்தியின் சுருக்கம் இதோ:

காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்கோழி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. அவரின் ஒரே மகள் திவ்யா. பிறக்கும்போதே கால்களில் குறைபாட்டுடன் பிறந்தார் திவ்யா. மாற்றுத்திறனாளியாக மகள் பிறந்ததால், தந்தை, குடும்பத்தை விட்டுச்சென்று விட்டார். இதனால் தனி நபராக, திவ்யாவை வளர்த்தார் தாய் பத்மாவதி...

எக்காரணத்துக்காகவும், மகளின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பத்மாவதி அவர்கள், கடந்த 12 ஆண்டுகளாக, மகளை, இடுப்பில் சுமந்து பள்ளிக்கு அழைத்து வருகிறார். சுமார் 2 கி.மீ. மகளைச் சுமந்துவந்து, அரசுப் பேருந்தில் பயணிக்கும் பத்மாவதி அவர்கள், மீண்டும் 1 கி.மீ. தூரம் மகளை சுமந்தவாறே பள்ளிக்கு நடந்து செல்கிறார். கருவாய் மகளை 10 மாதங்கள் சுமந்த தாய், கல்விக்காக 12 ஆண்டுகளாகச் சுமப்பது, அங்குள்ள மக்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் மகளின் எதிர்காலத்தை, எப்பாடுபட்டாவது உயர்த்திவிடுவோம் என்ற நம்பிக்கை கொண்டு, தாய் பத்மாவதி அவர்கள், 12 ஆண்டுகளாக, அவரைச் சுமந்து சென்ற தியாகம், ஊடகங்களின் கவனத்தை பெறாமல் போயிருந்தாலும் சரி, அதன் விளைவாகக் கிடைத்த உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிருந்தாலும் சரி, அவர், தன் மகள் திவ்யாவை, கல்லூரிக்கும் சுமந்து சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. அன்னையரின் நம்பிக்கையும், மன உறுதியும் போற்றுதற்குரியன.

மனித வரலாற்றின் துவக்கத்திலிருந்து, உலகின் ஒவ்வொரு நாட்டிலும், தாய் பத்மாவதி அவர்களைப்போன்று, பலகோடி அன்னையர் வாழ்ந்துள்ளனர். இன்றும் வாழ்ந்துவருகின்றனர். அங்கக்குறையுடன் பிறந்த தங்கள் மகள்களையும், மகன்களையும் வாழ்வில் வெற்றிபெறச் செய்துள்ளனர்.

கோவிட் 19 கொள்ளைநோயின் தாக்கத்திலிருந்து ஆயிரமாயிரம் பேரை காத்துவரும், மருத்துவப் பணியாளர்களை, குறிப்பாக, தாய்மைக் கனிவுடன் பல உயிர்களைக் காத்துவரும் பெண்களை, இவ்வேளையில் நினைத்து, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண், அன்று, இயேசுவுக்கும், ஒரு சில பாடங்களைச் சொல்லித்தந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அந்தப் பாடங்களை உள்வாங்கிய இயேசு, அப்பெண்ணின் நம்பிக்கையை மனதாரப் பாராட்டுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” (மத். 15: 28) என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.

கிறிஸ்தவ மறையில் பிறந்து, வளர்ந்துவரும் பலர், நம்பிக்கையில் குன்றியிருப்பதையும், கிறிஸ்துவைப்பற்றி ஓரளவே தெரிந்த வேற்றுமதத்தவர், பேரளவு நம்பிக்கை கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் கானானியப் பெண்ணைப்போல, வேற்று மதத்தவர் பலர், கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு, சவாலாகவும், பாடமாகவும் அமைந்த நேரங்களை எண்ணி, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

பாகுபாடுகளை மூலதனமாக்கி, நம்மை, சுயநலச் சிறைகளில் அடைத்துவைக்கும் அரசியல்வாதிகள், வெட்கித் தலைகுனியும்வண்ணம் கூறப்பட்டுள்ள ஓர் அழகிய தமிழ் செய்யுள் கூறும் எண்ணங்கள், நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று துவங்கும், கணியன் பூங்குன்றனார் அவர்களின் கவிதை வரிகள், வெறும் கவிதையாக, பாடலாக, நின்றுவிடாமல், நடைமுறை வாழ்வின் இலக்கணமாக மாறவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். இதோ, இக்கவிதையின் பொருளுரை:

எல்லா ஊரும் எம் ஊர். எல்லா மக்களும் எம் சொந்தம்

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை.

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை...

பிறந்து வாழ்வோரில், சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2020, 12:22