தேடுதல்

Vatican News
கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், இந்தியாவில், வறியோருக்கு உணவு வழங்கப்படுதல் கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், இந்தியாவில், வறியோருக்கு உணவு வழங்கப்படுதல் 

பொதுக்காலம் 18ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இன்றைய உலகில் பீடமேற்றி வணங்கப்பட்டுவரும் சுயநலம், பேராசை ஆகிய நோய்களுக்கு மருந்தாக விளங்கும், பகிர்வைக் குறித்து சிந்திப்பதற்கு, இன்றைய வழிபாட்டு வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 18ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

புனித அன்னை தெரேசா, ஒரு நாள், ஒரு பையில் அரிசி எடுத்துக்கொண்டு, ஓர் ஏழைப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றார். அப்பெண்ணும் அவரது குழந்தைகளும் பல நாட்களாக, பட்டினியாய் கிடந்தனர் என்பதை அன்னை அறிந்திருந்ததால், அவரைத் தேடிச்சென்றார். அன்னை கொண்டுவந்த அரிசியை, நன்றியோடு பெற்றுக்கொண்ட அப்பெண், அடுத்து செய்தது, அன்னையை வியப்பில் ஆழ்த்தியது. தான் பெற்ற அரிசியை, அப்பெண், இரு பங்காகப் பிரித்தார். ஒரு பங்கை, தனக்கு அடுத்த வீட்டில் வாழ்ந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். அன்னை அவரிடம் காரணம் கேட்டபோது, அப்பெண், "அன்னையே, நீங்கள் தந்த அரிசியில் பாதிப் பங்கைக் கொண்டு எங்களால் சமாளிக்கமுடியும். ஆனால், அடுத்த வீட்டிலோ, அதிகக் குழந்தைகள் உள்ளனர். அவர்களும் பல நாட்கள் பட்டினியாய் கிடக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார்.

புனித அன்னை தெரேசா மட்டுமல்ல, அவரது பரிவால் தொடப்பட்ட பல்லாயிரம் வறியோர், பகிர்தல் என்ற உன்னதப் பண்பை, இன்றும், இவ்வுலகில் பறைசாற்றி வருகின்றனர். இந்த நல்ல உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறி, இன்றைய ஞாயிறு வழிபாட்டைத் (சிந்தனையைத்) துவக்குகிறோம். இன்றைய உலகில் பீடமேற்றி வணங்கப்பட்டுவரும் சுயநலம், பேராசை ஆகிய நோய்களுக்கு மருந்தாக விளங்கும், பகிர்வைக் குறித்து சிந்திப்பதற்கு, இன்றைய வழிபாட்டு வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

பணம் ஏதுமற்ற மக்களின் பசியையும், தாகத்தையும் போக்க, இறைவன் விடுக்கும் அழைப்பு, இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கிறது:  

இறைவாக்கினர் எசாயா 55: 1

இறைவன் கூறுவதாவது: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்: கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றி, திராட்சை இரசமும், பாலும், வாங்குங்கள்.

பணமில்லாத வறியோரும் பசியாறி, தாகம் தீர்த்து, நிறைவு பெறலாம் என்று, இறைவன், இறைவாக்கினர் வழியே விடுத்த அந்த அழைப்பிற்கு, நடைமுறை வடிவம் தந்த இயேசுவை, இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். தனிமையான ஓரிடத்திற்குச் சென்ற தன்னைத் தொடர்ந்துவந்த மக்கள்மீது இயேசு பரிவு கொண்டார் என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பரிவு, ஒரு புதுமையைத் துவக்கிவைத்தது. அடுத்து, தங்களிடம் உள்ள உணவு மிகக் குறைவே என்றாலும், அதை பகிர்ந்துகொள்ள முன்வந்த சீடர்களின் மனநிலை, இப்புதுமையின் அடுத்தக் கட்டம் என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இவ்வுலகில் அனைவரும் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தும், உணவை, பணமாக மாற்றும் பேராசையினால், உணவைப் பதுக்கும் சுயநல வெறி வளர்ந்துவிட்டதால், பசியும், பட்டினியும், இவ்வுலகில் தாண்டவமாடுகின்றன. அதிலும் குறிப்பாக, இந்தக் கொள்ளைநோய் காலத்தில், உணவின்றி தவிப்போரின் எண்ணிக்கை உலகெங்கும், பலமடங்காக உயர்ந்துள்ளது.

இலாபம் தேடும் சுயநல வெறியால், தனி மனிதர்கள், உணவைப் பதுக்குவது ஒரு புறம் என்றால், இந்தியா போன்ற நாடுகளில், மக்களைச் சென்றடையவேண்டிய உணவு, உணவுக்கிடங்குகளில் அழுகிவருவதையும், அவற்றை, எலிகள் உண்பதையும் நாம் செய்திகளாகக் கேட்டு வருகிறோம்.

FCI (Food Corporation of India) என்றழைக்கப்படும் இந்திய உணவு நிறுவனத்தின் கிடங்குகளில், 2001ம் ஆண்டு, 9 கோடி டன் தானியம் முடங்கிக்கிடந்தது. 9 கோடி டன் தானியத்தைக் கொண்டு, 20 இலட்சம் பேருக்கு இரண்டு ஆண்டுகள் உணவு கொடுக்கலாம். அவ்வளவு உணவு அது. அந்த அளவுக்கு அரிசியும், கோதுமையும், இந்திய உணவுக்கிடங்குகளில் குவிந்திருந்த அதே 2001ம் ஆண்டில், ஒடிஸ்ஸா மாநிலத்தின் காசிப்பூர் பகுதியில் பல ஆயிரம் பேர் பட்டினியால் இறந்தனர். இக்கொடூரத்தைப்பற்றி, அப்போதையப் பிரதமர் வாஜ்பாயி அவர்கள், பாராளுமன்றத்தில் பேசியபோது, "நம் நாட்டில் தேவைக்கு அதிகமாகவே உணவை உற்பத்தி செய்கிறோம். ஆனால், உற்பத்தி செய்யப்படும் உணவு மக்களைச் சென்று சேர்வதில்லை. இதற்குக் காரணம், நம்மிடமுள்ள பொதுப் பகிர்வுமுறையில் தவறு உள்ளது! என்று கூறினார். உற்பத்தியில் குறைவில்லை ஆனால், பகிர்வதில்தான் குறைகள் உள்ளன என்று நாட்டின் பிரதமரே சொன்னார்.

இந்தியாவின் பகிர்வுமுறையில் குறைகள் உள்ளதென, நாட்டின் பிரதமர் சுட்டிக்காட்டியபின், நாம் ஏதும் கற்றுக்கொண்டோமா? இல்லை. இல்லவே இல்லை. பிரதமரின் இந்த கண்டனக்கூற்று வெளியாகி 20 ஆண்டுகள் சென்று, இதைவிடக் கொடுமையான விடயங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. கோவிட்-19 கொள்ளைநோய் கொண்டுவந்துள்ள பசியையும், பட்டினியையும் நீக்குவதற்குத் தேவையான உணவு, நம் உணவுக்கிடங்குகளில் இருந்தும், அவற்றை வறியோருக்கு வழங்காமல், அந்த தானியங்களைக் கொண்டு, எத்தனால் (Ethanol) என்ற திரவத்தைத் தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்போவதாக இந்திய அரசு அறிவித்தது.  

தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, மக்கள், கரங்களைக் கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் hand sanitizer திரவங்களை உருவாக்க, இந்த எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மக்களின் வயிற்றைக் கழுவ பகிர்ந்தளிக்கப்படவேண்டிய உணவு தானியங்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் வயிறை நிரப்பும் உணவுக்கு முன்னும் பின்னும் கரங்களைக் கழுவப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உணரும்போது, நம் உள்ளமும், வயிறும், பற்றியெரிகின்றன.

மக்களின் பசியைப் போக்க இயேசு ஆற்றிய புதுமைக்குத் திரும்புவோம். 5000க்கும் அதிகமான மக்களுக்கு இயேசுவும், சீடர்களும் உணவளித்த இந்தப் புதுமை, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது ஒரு கண்ணோட்டம். மற்றொரு கண்ணோட்டம், இயேசு அன்று நிகழ்த்தியது, ஒரு பகிர்வுப் புதுமை என்ற கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க, நமக்கு உதவியாக இருப்பது, யோவான் நற்செய்தியில் நாம் காணும் ஒரு குறிப்பு.

ஐந்து அப்பங்களும், இரண்டும் மீன்களும் அங்கிருந்தன என்பதை நான்கு நற்செய்திகளும் கூறினாலும், யோவான் நற்செய்தியில் மட்டும், அந்த உணவு, ஒரு சிறுவனிடம் இருந்தது என்ற குறிப்பு காணப்படுகிறது (யோவான் 6:9). சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்? என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில்கள், நமக்குப் பாடங்களாக அமைகின்றன.

பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக, உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று, சிறுவர், சிறுமிகள் எண்ணிப்பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்து, எடுத்துச்செல்வது, பெற்றோரே. யூதர்கள் மத்தியில் இத்தகைய முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?

பல தலைமுறைகளாய், யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால், உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது, மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச்செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. தாங்கள் செல்வது எவ்விடம் என்பதை சரியாக அறியாததால், குடும்பத்தலைவி முன்மதியோடு செயல்பட்டார். குடும்பமாய்ச் சென்ற தங்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் அவர் தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

மாலையானதும், பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. அங்கிருந்த பல யூதர்களிடம் உணவுப் பொட்டலங்கள் இருந்தன. ஆனால், யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள், அந்த பாலை நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் படிப்பினைகளில் பகிர்வைப்பற்றி பேசினார், சரிதான். ஆனால், எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்வது? என்ற கேள்விகளில், பெரியவர்களும், இயேசுவின் சீடர்களும் முழ்கியிருந்தார்கள். மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடுவது நல்லது என்று சீடர்கள் சிந்தித்தனர் (காண்க. மத். 14:15). நல்லவேளை, குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள், பெரியவர்களின் எண்ண ஓட்டங்களைப் போல் இல்லாததால், அந்தப் புதுமை நிகழ வாய்ப்பு உருவானது.

மக்களுக்கு உணவளிப்பது பற்றி இயேசு சீடர்களிடம் பேசுவதைக் கேட்ட ஒரு சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். பின்விளைவுகளைச் சிறிதும் கணக்கு பார்க்காமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், அச்சிறுவன், இயேசுவிடம் வந்து, தன்னிடம் இருந்ததையெல்லாம் பெருமையுடன் தந்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் குழந்தையின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும், தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பமானது ஓர் அற்புத விருந்து.

ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த பகிர்வின் மகிழ்விலேயே அங்கிருந்தவர்களுக்கு பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான், அவர்கள் உண்டதுபோக, மீதியை, 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக இன்றைய நற்செய்தி கூறுகிறது. (காண்க. மத். 14:20) இயேசு அன்று நிகழ்த்தியது, ஒரு பகிர்வின் புதுமை.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச்செய்தார் என்பது புதுமைதான். ஆனால், தன் அற்புதச் சக்திகொண்டு அப்பங்களைப் பலுகச்செய்ததைவிட, தன் படிப்பினைகளால் மக்கள் மனதை மாற்றி, இயேசு, அவர்களைப் பகிரச்செய்தார் என்பதை, நாம் மாபெரும் ஒரு புதுமையாகக் கருதலாம்.

வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான், இவ்வுலகின் பசியைப் போக்கமுடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான், இந்தக் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான், இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, அச்சிறுவனைப் போல், நாம் ஒவ்வொருவரும் பகிர்வு என்ற புதுமையை ஆரம்பித்துவைக்கலாம்.

கோவிட்-19 கொள்ளைநோய், பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பறித்ததைக் காட்டிலும், பல கோடி மக்களின் வாழ்வாதாரங்களை வேரோடு சாய்த்துவிட்டது என்பது மிகப்பெரும் கொடுமை. இந்தக் கொடுமையைக் களைய, பல்லாயிரம் தனி மனிதர்கள், தங்களால் இயன்ற அளவில் பகிர்வுப் புதுமைகளை ஒவ்வொரு நாளும் நடத்திவருகின்றனர். பெரியவர்கள் காட்டும் வழியைப் பின்பற்றி, பல சிறுவர், சிறுமியரும், இளையோரும், தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு, வறியோருக்கு உணவு வழங்கிவரும் செய்திகள், நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளன.

வாழ்வை வேரோடு சாய்த்துவிடும் வேதனைகள் நடுவிலும், சிறுவர், சிறுமியர் வெளிப்படுத்தும் உன்னதமானப் பண்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி, ஜப்பான் நாட்டை உலுக்கியெடுத்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி, ஆகியவற்றின் பேரழிவுகள் நடுவே, அங்கு நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வு, பகிர்வின் பாடங்களை நமக்குள் ஆழமாகப் பதிக்கின்றது. அந்தப் பேரழிவைத் தொடர்ந்து, இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட, வியட்நாம் நாட்டிலிருந்து, ஃபுக்குஷிமா (Fukushima) நகருக்குச் சென்ற Ha Minh Thanh என்ற இளையவர், தன் நண்பருக்கு எழுதிய மடலில், இந்நிகழ்வை இவ்வாறு விவரித்துள்ளார்:

“நான் இப்போது, ஃபுக்குஷிமாவில் பணியாற்ற வந்துள்ளேன். நேற்றிரவு இங்கு நடந்த ஒரு நிகழ்வு என்னைப் பெரிதும் பாதித்தது. அந்நிகழ்வின் நாயகனான சிறுவன், வயதில் வளர்ந்துவிட்ட எனக்கு முக்கியமான வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித்தந்தான்.

நேற்றிரவு, இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், உணவுப் பொட்டலங்களை வழங்க ஒரு நிறுவனம் வந்திருந்தது. அங்கு வரிசையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் நான் இருந்தேன். மிகவும் நீளமான அந்த வரிசையின் கடைசியில், 9 வயது நிறைந்த ஒரு சிறுவன், குளிரில் நடுங்கியபடி, நின்றுகொண்டிருந்தான். அவன், உணவு வழங்கும் இடத்திற்குச் செல்வதற்குள், உணவு தீர்ந்துபோய்விடும் என்று நான் அஞ்சினேன்.

அச்சிறுவனை அணுகி, பேசத் துவங்கினேன். அச்சிறுவன், அந்தப் பள்ளியின் மாணவன் என்பதை அறிந்தேன். அவனது அப்பா, பக்கத்திலிருந்த ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தார். ஒவ்வொருநாளும், அவர், அச்சிறுவனை பள்ளிக்கு காரில் கொண்டுவந்து இறக்கிவிட்டு, தன் தொழிற்சாலைக்குச் செல்வார். நிலநடுக்கம் ஏற்பட்ட நாளன்று, சுனாமி வரும் என்ற அறிவிப்பு தொடர்ந்ததால், சிறுவனை அழைத்துச்செல்ல அப்பா காரில் வந்தார். சிறுவன், பள்ளியின் மூன்றாம் மாடியில் நின்றுகொண்டிருந்தான். அவ்வேளையில், அங்கு, திடீரென வந்த சுனாமியில், தன் அப்பாவின் கார் அடித்துச் செல்லப்படுவதை, சிறுவன், மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வாழும் வீடு, கடற்கரைக்கருகே இருந்ததால், அவன் அம்மாவும், தங்கையும் வீட்டோடு அடித்துச் செல்லப்பட்டனர். அவனுடைய ஏனைய உறவினர்களைப் பற்றிக் கேட்டதும், அச்சிறுவன் தலையை மறுபக்கம் திருப்பிக்கொண்டு அழுதான்.

தன் கதையை அச்சிறுவன் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவன் குளிரில் நடுங்கியதைப் பார்த்தேன். நான் அணிந்திருந்த 'கோட்'டைக் கழற்றி, அவன் மீது போர்த்தினேன். அப்போது, எனக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலம், அந்த 'கோட்' பையிலிருந்து, வெளியே விழுந்தது. அதை எடுத்து, அச்சிறுவனிடம் கொடுத்தேன். "நீ உணவு பெற செல்வதற்குள், அங்குள்ள உணவுப் பொட்டலங்கள் தீர்ந்துபோகலாம். நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன். அதனால், நீ இதைச் சாப்பிடு" என்று அவனிடம் கூறினேன்.

அந்த உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக்கொண்ட சிறுவன், தலைவணங்கி எனக்கு நன்றி சொன்னான். பின் அவன் செய்தது, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவன் அந்த உணவுப்பொட்டலத்தை எடுத்துச்சென்று, உணவு வழங்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த மற்ற பொட்டலங்களுடன் அதை வைத்துவிட்டு திரும்பிவந்தான்.

அவனிடம், "நீ ஏன் சாப்பிடவில்லை? உனக்குப் பசிக்கவில்லையா?" என்று கேட்டேன். அச்சிறுவன் என்னிடம், "எனக்குப் பசிக்கிறது. ஆனால், என்னைவிட அதிகப் பசியில் இருப்பவர்கள் இந்த வரிசையில் நிற்கின்றனர். நான் அந்த உணவுப் பொட்டலத்தை அங்கு வைத்ததால், இன்னும் சிலருக்கு அது சமமாகப் பகிர்ந்து தரப்படும்" என்று கூறினான். அச்சிறுவன் கூறியதைக் கேட்டதும், கண்ணீர், என் கண்களை நிறைத்தது.

மற்றவர்கள் நன்மைபெற வேண்டும் என்பதற்காக, தன் உணவைத் தியாகம் செய்யும் அளவு, 9 வயது சிறுவன் ஒருவன் சிந்திக்கமுடிந்தால், அவன் வளர்ந்த குடும்பமும், அவன் வாழும் சமுதாயமும் உன்னதமானவை என்பதை, அன்று நான் புரிந்துகொண்டேன்” என்று அந்த வியட்நாம் இளையவர் தன் மடலில் எழுதியிருந்தார்.

மனம் இருந்தால், அந்த மனதில் பரிவிருந்தால், பகிரவேண்டும் என்ற கனவிருந்தால், கொள்ளை நோய்களும், நிலநடுக்கங்களும், சுனாமிகளும், சூறாவளிகளும் நம் மனிதாபிமானத்தை அழித்துவிட முடியாது. பகிர்ந்துவாழும் மனதை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று, இந்த ஞாயிறு வழிபாடு நமக்குச் சவால் விடுக்கிறது. நமது பதில் என்ன?

01 August 2020, 14:11