தேடுதல்

Vatican News
பெரு நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு பெரு நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு  

பெரு நாட்டு காரித்தாசுக்கு மனிதாபிமான விருது

2003ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி, ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் அமைந்துள்ள ஐ.நா. நிறுவன தலைமையகத்தைப் பயங்கரவாதிகள் தாக்கியதில் 22 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய நாடுகள் நிறுவனம், இந்த நாளை, மனிதாபிமான உலக நாளாக அறிவித்து கடைப்பிடித்து வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெரு நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் சிறப்பான மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டும் விதமாக, மனிதாபிமான உலக நாளான, ஆகஸ்ட 19, இப்புதனன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து, காரித்தாஸ் அமைப்பை கவுரவிக்கவுள்ளன.

பெரு நாட்டில், கோவிட்-19 கொள்ளைநோய் காரணமாக, பல்வேறு இக்கட்டான சூழல்களை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்காக, காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் பணிகளை, பல்வேறு அமைப்புகள் பாராட்டியுள்ளன.

பெரு நாட்டு குடிமக்கள் பாதுகாப்பு தேசிய நிறுவனம் (INDECI), ஐக்கிய நாடுகள் அமைப்பு, மேலும் பல மனிதாபிமான நிறுவனங்கள் இணைந்து, இவ்விருதை வழங்குகின்றன.

பெரு நாட்டு காரித்தாஸ் அமைப்பின் தலைவரான, Chota மறைமாவட்ட ஆயர் Fortunato Pablo Urcey அவர்கள், ஆகஸ்ட 19, இப்புதன்கிழமையன்று நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவ்விருதைப் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான உலக நாள்

2003ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி, ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் அமைந்துள்ள ஐ.நா. நிறுவன தலைமையகத்தைப் பயங்கரவாதிகள் தாக்கியதில் 22 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய நாடுகள் நிறுவனம், இந்த நாளை, மனிதாபிமான உலக நாளாக அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

உலகெங்கும் பல்வேறு இக்கட்டான சூழல்கள் மத்தியிலும் மனிதாபிமானப் பணிகளைத் துணிவுடன் ஆற்றும், உண்மையான வீரர்களை ஊக்குவிப்பதற்கும், இந்தப் பணிகளை ஆற்றுகையில், உயிரிழந்தோர், மற்றும், காயமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், மனிதாபிமான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

18 August 2020, 14:01