தேடுதல்

Vatican News
வடகிழக்கு இந்திய திருஅவை வடகிழக்கு இந்திய திருஅவை 

கோவிட் காலத்தில் 84 அருள்பணியாளர்களின் நிதியுதவி

பாட்னா உயர் மறைமாவட்டத்தின் மொத்த மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவரே கத்தோலிக்கர். திருஅவையின் பணிகளோ மிக அதிகம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்த கோவிட் கொள்ளைநோய் காலத்தில் இந்தியாவின் பாட்னா உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த 84 அருள் பணியாளர்கள், தங்கள் மாத உதவித் தொகையின் ஒரு பகுதியை ஏழைகள், மற்றும், வேலைவாய்ப்பற்றோருக்கென வழங்கியுள்ளனர்.

பீகார் மாநிலத்தின் 33 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் நிலையில், இந்த கோவிட்  கொள்ளைநோய் காலத்தில், ஏழை மக்களுக்கு உணவு வழங்கவும், கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து பாதுகாப்பதற்குரிய உபகரணங்கள் வாங்கி வழங்கவும், அருள்பணியாளர்கள், இந்நிதி உதவியை வழங்கியுள்ளனர்.

மாநிலத்தின் உள்ளே வாழும் ஏழை மக்களுக்கு உதவித் தேவைப்படும் அதேவேளை, வெளி மாநிலங்களிலிருந்து திரும்பிவந்து, வேலையின்றி இருக்கும், ஏறத்தாழ 13 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும், உணவு உதவிகளும் தேவைப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பலரின் தாராள உதவியினால், பீகார் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும், இந்நோயின் தீவிரம் குறித்த விழிப்புணர்வையும் கத்தோலிக்க திருஅவையால் வழங்கமுடிகிறது  என்றார், பாட்னா உயர்மறைமாவட்ட  சமூகப்பணி மையத்தின் இயக்குநர், அருள்பணி அமல்ராஜ்.

பாட்னா உயர் மறைமாவட்டத்தின்  மொத்த மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களையே கத்தோலிக்கர்களாகக் கொண்டிருந்தாலும், பெரிய அளவில் உதவிகளை ஆற்றிவரும் தலத்திருஅவை, வேலையிழந்தோருக்குக் கால்நடைகளையும், குழந்தைகளுக்கு கல்வியையும் வழங்குவதுடன், பெண்களுக்கு மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்திச் சிறப்பு சேவையாற்றிவருகிறது. (AsiaNews)

27 August 2020, 13:22