தேடுதல்

Vatican News
நைஜீரியாவின் லாகோசில் போராட்டம் நைஜீரியாவின் லாகோசில் போராட்டம்  (ANSA)

நைஜீரிய ஆயர்கள்: கொலைசெய்வதை நிறுத்துங்கள்

நைஜீரிய நாட்டினர் அனைவரும், அமைதி மற்றும், ஒப்புரவின் கருவிகளாகச் செயல்படவும், அனைவருக்கும் நீதி கிடைக்கவும் உழைக்குமாறு ஆயர்கள் அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருவது குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ள அதேவேளை, அப்பாவி மக்கள் கொலைசெய்யப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படுமாறு, அந்நாட்டு ஆயர்கள், நைஜீரிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

நைஜீரியாவில், குறிப்பாக, நாட்டின் வடக்கே அண்மையில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களில், பயங்கரவாதம் தெரிகின்றது என்று கூறியுள்ள, நைஜீரிய கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCN), இத்தகையச் சூழ்நிலைகளைக் கண்டு நாங்கள் சோர்ந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளது.  

நைஜீரிய ஆயர்கள் பெயரில், அறிக்கை வெளியிட்டுள்ள, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Augustine Obiora Akubeze அவர்கள், தென்பகுதி மாநிலமான கதுனாவில் இடம்பெறும் படுகொலைகள் குறித்து கேள்விப்படுகையில், எம் இதயங்களில் இரத்தம் வடிகின்றது என்று கூறினார்.

இத்தகையச் சூழலில், கொலைகள் செய்வதை நிறுத்துங்கள் என்பதே, நாட்டினர் அனைவரிடமிருந்தும் வரவேண்டிய ஒரேயொரு பதிலாக இருக்கவேண்டும் என்றும், நாட்டின் வடபகுதியில் Fulani புரட்சியாளர்கள் நடத்துவதாய் சந்தேகிக்கப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்றும், பேராயர் Akubeze அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த புதனன்று, குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பான்மையினோர் பெண்களும் சிறாரும் என்று கூறியுள்ள பேராயர் Akubeze அவர்கள், நீதி இல்லாத இடங்களில், அமைதி ஒருபோதும் நிலவாது என்றும், அமைதி இல்லாத இடங்களில், வளர்ச்சி இல்லை என்றும் கூறியுள்ளார். 

செபத்திற்கு அழைப்பு

இம்மாதம் 22ம் தேதி முதல், வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை, அதாவது நைஜீரியாவின் சுதந்திர நாளின் விழிப்பு நாள்வரை, 40 நாள்களுக்கு, மூவேளை செபத்திற்குப்பின், வானகத்தந்தையை நோக்கி செபம், மூன்று முறை அருள்மிகப் பெற்றவரே செபம், இறுதியில் மூவொரு இறைவனுக்கு வணக்கம் சொல்லவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

1960ம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் தேதி, நைஜீரியா நாடு சுதந்திரம் அடைந்தது. வருகிற அக்டோபர் முதல் தேதி, சுதந்திரநாளின் 60ம் ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது. அன்று அனைவரும், நைஜீரியாவை கடவுள் காப்பாற்றுமாறு, துயர மறையுண்மை செபமாலையைச் செபிக்குமாறு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நைஜீரிய நாட்டினர் அனைவரும், அமைதி மற்றும் ஒப்புரவின் கருவிகளாகச் செயல்படவும், அனைவருக்கும் நீதி கிடைக்கவும் உழைக்குமாறு அழைப்பு விடுத்த ஆயர்கள், கோவிட்-19 கொள்ளைநோயால் இறந்தவர்களின் ஆன்மாக்கள் நிறை சாந்தியடைய செபிக்கின்றோம் என்று கூறியுள்ளனர்.

11 August 2020, 10:39