தேடுதல்

தீப்பற்றி எரிந்த மானாகுவா பேராலயச் சிற்றாலயம் தீப்பற்றி எரிந்த மானாகுவா பேராலயச் சிற்றாலயம் 

மனாகுவா பேராலயத்தில் பயங்கரவாத தாக்குதல்

மனாகுவா பேராலயத்தில் அமைந்துள்ள, கிறிஸ்துவின் இரத்தம் என்ற பெயர்கொண்ட சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள 382 ஆண்டுகள் பழமையுடைய, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் திருவுருவத்தில், அவரின் இரத்தம் வடிவதுபோன்று சித்தரிக்கப்பட்டிருந்தது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நிக்கராகுவா நாட்டின் மனாகுவா பேராலயம் குண்டுவைத்து தாக்கப்பட்டிருப்பது, திட்டமிட்ட ஒரு பயங்கரவாதச் செயல் மற்றும், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப்பணியில் அச்சுறுத்தலை உருவாக்கும் நோக்கத்தில் அது நடத்தப்பட்டுள்ளது என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஜூலை 31, இவ்வெள்ளியன்று, மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவா நாட்டின், மனாகுவா நகரின் அமலமரி பேராலயத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றாலயத்தில், இனம் தெரியாத மனிதர் ஒருவர், தீப்பற்றி எரியும் குண்டை வீசியதில், அந்த சிற்றாலயமும், அங்கு 300 ஆண்டுகளுக்கு மேலாக வணங்கப்பட்டுவந்த சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் திருவுருவமும் கடுமையாய்ச் சேதமடைந்துள்ளன.  

இந்த வன்முறை குறித்து ஊடகங்களிடம் பேசிய, மனாகுவா பேராயர், கர்தினால் Leopoldo Brenes அவர்கள், எந்தவித அவசரமுமின்றி, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த வன்முறை, ஒரு பயங்கரவாதச் செயல் என்பதை உறுதி செய்கின்றது என்று கூறியுள்ளார்.

இந்த பயங்கரவாதத்தை நடத்திய அந்த மனிதர், அந்த பேராலயத்தை ஏறத்தாழ இருபது நிமிடங்கள் சுற்றி சுற்றி வந்தார் எனவும், அண்மையில் திருடப்பட்ட அப்பேராலய கதவு வழியாக அவர் வெளியேறத் திட்டமிட்டார் என்றும், அவரைப் பார்த்தவர்கள் அளித்துள்ளதைச் சாட்சியங்களை வைத்து, இது, ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்பதை உறுதிப்படுத்துகின்றது என்று கர்தினால் Brenes அவர்கள் கூறியுள்ளார்.  

கிறிஸ்துவின் இரத்தம் என்ற பெயர்கொண்ட அந்த சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள 382 ஆண்டுகள் பழமையுடைய, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் திருவுருவத்தில், அவரின் இரத்தம் வடிவதுபோன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.  

கிறிஸ்துவின் இரத்தம் என்ற பெயர்கொண்ட அந்த சிற்றாலயத்திற்குள், தலையையும் கழுத்தையும் மூடிமறைக்கும் மேலாடை ஒன்றை அணிந்திருந்த மனிதர் ஒருவர், கையில் ஏதோ ஒரு பொருளுடன், கிறிஸ்துவின் இரத்தத்தைப் பார்க்க வந்தேன் என்று கூறினார் என்றும், பின்னர், தன் கையிலிருந்த அந்தப் பொருளை எறிந்தார் என்றும், அந்த மனிதரைப் பார்த்தவர்கள் சாட்சி சொன்னதாக, நிக்கராகுவா நாட்டின் La Prensa தினத்தாள் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2020, 13:26