தேடுதல்

Vatican News
புனித அன்னை தெரேசாவின் 110வது பிறந்தநாளுக்கென அவரது கல்லறையில் விளக்கு ஏற்றப்படுதல் புனித அன்னை தெரேசாவின் 110வது பிறந்தநாளுக்கென அவரது கல்லறையில் விளக்கு ஏற்றப்படுதல் 

புனித அன்னை தெரேசா அவர்களின் 110வது பிறந்தநாள்

ஒரு பெண்மணியும், அவர் ஆற்றிய மறைப்பணியும் இவ்வுலகை பெருமளவு மாற்றியதால், அப்பெண்மணியான அன்னை தெரேசா அவர்களை, 20ம் நூற்றாண்டின் காவலர் என்றழைப்பது பொருத்தமாக உள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 26, இப்புதனன்று, புனித அன்னை தெரேசா அவர்களின் 110வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வேளையில், கொல்கத்தா உயர் மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் டொமினிக் கோமஸ் அவர்கள், அன்னையின் கல்லறை அமைந்துள்ள இடத்தில் திருப்பலியாற்றினார் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஒரு பெண்மணியும், அவர் ஆற்றிய மறைப்பணியும் இவ்வுலகை பெருமளவு மாற்றியதால், அப்பெண்மணியான அன்னை தெரேசா அவர்களை, 20ம் நூற்றாண்டின் காவலர் என்றழைப்பது பொருத்தமாக உள்ளது என்று, அருள்பணி கோமஸ் அவர்கள் தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

புனித அன்னை தெரேசா உருவாக்கிய பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையின் தாய் இல்லத்தில், அன்னையின் கல்லறையையொட்டி அமைந்துள்ள சிற்றாலயத்தில், அந்த அன்னையின் 110வது பிறந்தநாள் நினைவாக நிறைவேற்றப்பட்ட திருப்பலியில், இத்துறவு சபையின் உலகத் தலைவர் அருள் சகோதரி பிரேமா அவர்களும் ஏனைய சகோதரிகளும் பங்கேற்றனர்.

இன்றைய உலகிற்குத் தேவைப்படும் இறைவாக்கினர் என்ற இலக்கணத்திற்கு, அன்னை தெரேசா அவர்கள் முழுமையான எடுத்துக்காட்டு என்று கூறிய அருள்பணி கோமஸ் அவர்கள், அன்னை சொன்னவற்றையும், செய்தவற்றையும், இறைவாக்கினருக்குரிய ஆர்வத்துடன் செய்தார் என்று குறிப்பிட்டார்.

1990ம் ஆண்டுகளில் வளைகுடா போர் நிகழ்ந்த வேளையில், அமைதியின் வழியை உண்மையான உள்ளத்துடன் தேடுமாறு, அந்தப் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க அரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் அவர்களுக்கும், ஈராக் அரசுத்தலைவர் சதாம் ஹுசெய்ன் அவர்களுக்கும் அன்னை தெரேசா அவர்கள் எழுதிய மடலைக் குறித்து, அருள்பணி கோமஸ் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார். (AsiaNews)

27 August 2020, 12:50