தேடுதல்

Vatican News
மொரீசியஸ் கடலில், கசிந்துள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணி மொரீசியஸ் கடலில், கசிந்துள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணி  (AFP)

கடலில் கச்சா எண்ணெய் கசிவு குறித்து மொரீசியஸ் தலத்திருஅவை

மொரீசியஸ் நாட்டு கடல் பகுதி தெளிவான நீலநிற தண்ணீருக்கும், 1,700 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உட்பட, வளமையான பல்லுயிர்களுக்கும், பவளப்பாறைகளுக்கும் புகழ்பெற்றது - கர்தினால் பியட்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பவளப் பாறைகள் மிகுந்த மொரீசியஸ் தீவு நாட்டுக் கடலில், சரக்குக் கப்பல் ஒன்றிலிருந்து ஆயிரம் டன்களுக்கு அதிகமான கச்சா எண்ணெய் கசிந்துள்ளது, தங்கள் வாழ்வுக்கு கடலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவக் கிராம மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று, அந்நாட்டு Port-Louis ஆயரான, கர்தினால் Maurice Piat அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டு சரக்குக் கப்பல் ஒன்று, நான்காயிரம் டன் அளவுக்குக் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு இந்தியப் பெருங்கடலில் பயணித்தபோது, ஜூலை 25ம் தேதி மொரீசியஸ் அருகே பவளப்பாறைகளின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தினால் கப்பலில் விரிசல் ஏற்பட்டு ஆயிரம் டன்களுக்கு அதிகமான கச்சா எண்ணெய் இந்தியப் பெருங்கடலில் கலந்தது. இந்த எண்ணெய், காடுகள், கடல் வாழ் உயிரினங்கள், வெள்ளைமணல் கடற்கரைப் பகுதிகளை மூழ்கடித்துள்ளது.

இது குறித்து, ஆகஸ்ட் 11, இச்செவ்வாயன்று அறிக்கை வெளியிட்ட கர்தினால் பியட் அவர்கள், இந்த விபத்தால், பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், சுற்றுச்சூழலில் உருவாக்கியுள்ள இந்த பாதிப்பு குறித்து, மொரீசியஸ் மக்கள் அனைவருமே கவலையடைந்துள்ளனர் என்றும் கூறினார்.

மொரீசியஸ் நாட்டு கடல் பகுதி தெளிவான நீலநிற தண்ணீருக்கும், 1,700 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உட்பட, வளமையான பல்லுயிர்களுக்கும், பவளப்பாறைகளுக்கும் புகழ்பெற்றது என்று கூறிய கர்தினால் பியட் அவர்கள், கடலில் சிந்தியுள்ள எண்ணெயை அகற்றும் பணிக்கு தங்களை அர்ப்பணித்துள்ள, உள்ளூர் தன்னார்வலர்களுக்கும், சமுதாய குழுக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவத் தன்னார்வலர்கள் அதிகமாக இப்பணியில் தங்களை உட்படுத்துமாறு கர்தினால் பியட் அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில், ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான மொரீசியசில், 790 சதுர மைல் பரப்பளவில் 12 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் வாழ்கின்றனர். கடந்த ஆண்டில், திருத்தந்தை, இந்நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (CNA)

15 August 2020, 14:36