தேடுதல்

Vatican News
லாகூர் பேராலயத்தின்முன் பல்சமயத் தலைவர்கள் லாகூர் பேராலயத்தின்முன் பல்சமயத் தலைவர்கள் 

லாகூர் கத்தோலிக்க பேராலயத்தில் பல்வேறு மதத்தவர்

பல்வேறு மதங்களைச் சார்ந்த நாம் எல்லாரும் சகோதரர் சகோதரிகள். அமைதியைப் பின்பற்றும் நாம் எல்லாரும், ஒருவர் ஒருவரின் வழிபாட்டுத்தலங்களைச் சந்திக்கவேண்டும் - லாகூர் பேராயர் ஷா

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில், கோவிட்-19 ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, ஆலயங்களில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து, லாகூர் இயேசுவின் திருஇருதய கத்தோலிக்க பேராலய மீள்திறப்பு நிகழ்வில், பல்வேறு மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

லாகூர் பேராயர் செபஸ்தியான் ஷா அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று, ஆகஸ்ட் 16, இஞ்ஞாயிறன்று நடைபெற்ற இந்நிகழ்வில், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவர் ஆயர் Irfan Jamil அவர்களும், பாகிஸ்தான் கிறிஸ்தவ சபையின் பல்வேறு பிரதிநிதகளும், இஸ்லாம் மதத் தலைவர்களும், பல்சமய நல்லிணக்க தேசிய அமைதி குழுவின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பேராயர் ஷா அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்தை களைவதற்கு, பல்வேறு மதத்தினரும் ஒன்றிணையவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

பல்வேறு மதங்களைச் சார்ந்த நாம் எல்லாரும் சகோதரர் சகோதரிகள் என்றும், அமைதியைப் பின்பற்றும் நாம் அனைவரும், ஒருவர் ஒருவரின் வழிபாட்டுத்தலங்களைச் சந்திக்கவேண்டும் என்றும், உண்மையில், இந்த கொள்ளைநோய் காலத்திலும் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்றும், பேராயர் ஷா அவர்கள் கூறினார்.

பேராலயத் திறப்பு நிகழ்வில், முதலில் இறைவேண்டல் செய்த ஆங்கிலிக்கன் சபை போதகர் Shahid Meraj அவர்கள், பாகிஸ்தானையும், உலகம் முழுவதையும் தற்போதைய கொள்ளைநோயிலிருந்து காப்பாறுமாறு மன்றாடினார்.

இதில் பங்குகொண்ட பாகிஸ்தான் சீக்கிய மதத் தலைவரான Sardar Bishan Singh அவர்கள், இந்த பல்சமய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த பேராயர் ஷா அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பாகிஸ்தானில் கோவிட்-19 கொள்ளைநோயால் 6,168 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாகத் தாக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN)

18 August 2020, 13:28