தேடுதல்

Vatican News
டோக்கியோவில் வீடற்ற மனிதர் டோக்கியோவில் வீடற்ற மனிதர்  (AFP or licensors)

புலம்பெயர்ந்தோர் குறித்த முற்சார்பு எண்ணங்கள் அகற்றப்பட

1990ம் ஆண்டு முதல், 1991ம் ஆண்டுவரை நடைபெற்ற வளைகுடா போரில் ஜப்பானின் Sadako Ogata அவர்கள் ஆற்றிய நற்பணியை வைத்து, ஐக்கிய நாடுகள் நிறுவனம், அவரை, புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவராக நியமித்திருப்பதற்கு பாராட்டு - ஆயர் Michiaki

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தில் புலம்பெயர்ந்தோர் குறித்த முற்சார்பு எண்ணங்கள், சந்தேகங்கள் போன்றவற்றை அகற்றி, அவர்களை ஏற்று, நல்லிணக்கத்துடன் வாழுமாறு, ஜப்பான் ஆயர்கள், தங்கள் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வருகிற செப்டம்பர் 27ம் தேதி கடைப்பிடிக்கப்படும், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் 106வது உலக நாளுக்கென, செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவரான Saitama மறைமாவட்ட ஆயர் Michiaki Yamanouchi அவர்கள், இக்காலத்தில், ஜப்பான் நாட்டிற்குள்ளே புலம்பெயர்ந்த மக்கள் பலர் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த 106வது உலக நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், உலகில் அதிகரித்துவரும் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்கள் குறித்து அக்கறை காட்டுமாறும், அவர்களுக்கென புதிய கொள்கைகள் வகுக்கப்படுமாறும், அழைப்பு விடுத்துள்ளதை, ஆயர் Michiaki அவர்கள், தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக, புலம்பெயர்ந்த மக்கள், புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர் என்றும், இயேசு கிறிஸ்துபோன்று, வேறு வழியின்றி, இடம்பெயரும் மக்களை ஏற்று, பாதுகாத்து, ஊக்கமளித்து, அவர்களோடு நல்லிணக்கத்தோடு வாழவேண்டும் என்றும், ஆயர் Michiaki அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜப்பானில், கணனி-இணையதள வீடற்றோரும் உள்ளனர், இவர்கள், 24 மணி நேரமும், இணையதளத்தில் உறங்குகின்றனர் என்றும், அந்த சேவையை வழங்கும் manga cafe இணையதள அமைப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ள ஆயர், இந்த அமைப்பு, இணையதள வசதிகளை மட்டுமல்லாமல், உணவு, குடிபானம் மற்றும் குளியல் வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது என்றும் கூறினார்.  

1990ம் ஆண்டு முதல், 1991ம் ஆண்டுவரை நடைபெற்ற வளைகுடா போரில் ஜப்பானின் Sadako Ogata அவர்கள் ஆற்றிய நற்பணியை வைத்து, ஐக்கிய நாடுகள் நிறுவனம், அவரை, புலம்பெயர்ந்தோர் அமைப்பின் தலைவராக நியமித்திருப்பதைப் பாராட்டியுள்ள ஆயர் Michiaki அவர்கள், இத்தகையப் பொறுப்பை வகிக்கும் முதல் ஜப்பானியர் என்பது, நாட்டிற்குப் பெருமை தருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

15 August 2020, 14:40