தேடுதல்

Vatican News
2020, ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி நகரின் Urakami பேராலயத்தில், நடைபெற்ற சிறப்புத் திருப்பலி 2020, ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி நகரின் Urakami பேராலயத்தில், நடைபெற்ற சிறப்புத் திருப்பலி   (AFP or licensors)

அணு ஆயுதங்களின் குவிப்பு நன்னெறியல்ல – பேராயர் மார்ட்டின்

ஆகஸ்ட் 9, இஞ்ஞாயிறு, நாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்ட நேரமான காலை 11.02 மணிக்கு, அந்த அணுகுண்டு தாக்குதலால் சிதைந்துபோன Urakami பேராலயத்தில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகில் போர் புரிவதற்கென அணு சக்தியை பயன்படுத்துவதும், அணு ஆயுதங்களை குவித்து வைப்பதும், அழிவை மனதில் கொண்டு அணு ஆய்வுகள் நடத்துவதும் நன்னெறியல்ல என்றும், அவை, கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முரணானவை என்றும் அயர்லாந்து பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 9, இஞ்ஞாயிறன்று, ஜப்பான் நாட்டின் நாகசாகியில், அமெரிக்க ஐக்கிய நாடு, அணுகுண்டு தாக்குதல் மேற்கொண்டதன் 75ம் ஆண்டு நினைவுகூரப்பட்ட வேளையில், புனித பேட்ரிக் பேராலயத்தில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய பேராயர் மார்ட்டின் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

சுழல்காற்றிலும், நிலநடுக்கத்திலும், தீயிலும் இறைவன் இல்லை என்பதைக் கூறும் இஞ்ஞாயிறு வாசகத்தைக் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் மார்ட்டின் அவர்கள், இறைவனின் வருகை, அமைதியில் வீசும் தென்றலில் மட்டுமே இருக்கும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

நாகசாகி நகரில் சிறப்பு வழிபாடு

இதற்கிடையே, ஆகஸ்ட் 9, இஞ்ஞாயிறு, நாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்ட நேரமான காலை 11.02 மணிக்கு, அந்த அணுகுண்டு தாக்குதலால் சிதைந்துபோன Urakami பேராலயத்தில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

வழக்கமாக 5000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் இந்த வழிபாடு மற்றும் திருப்பலி, இவ்வாண்டு, கோவிட் 19 உருவாக்கிய தடைகளால் 500 பேர் மட்டுமே கலந்துகொண்ட ஒரு நிகழ்வாக அமைந்தது.

இந்த வழிபாட்டு நிகழ்வில் உரையாற்றிய நாகசாகி நகர மேயர் Tomihisa Taue அவர்கள், உலகிலிருந்து அணு ஆயுதங்களை முற்றிலும் தடை செய்வதற்கு ஜப்பான் அரசு உலக அரசுகளை வலியுறுத்த வேண்டும் என்ற விண்ணப்பத்தை எழுப்பினார்.

12 August 2020, 14:01