தேடுதல்

பல்மத கூட்டத்தில் கர்தினால் சாக்கோ (17.09.2019) பல்மத கூட்டத்தில் கர்தினால் சாக்கோ (17.09.2019) 

கிறிஸ்தவர்கள் நாடு திரும்ப, ஈராக் புதிய பிரதமர் அழைப்பு

ஈராக் நாட்டில் நிலையான தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் புதிய பிரதமர் எடுக்கும் முயற்சிகளுக்கு தலத் திருஅவை அதிகாரிகள் முழு ஆதரவு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டில் ISIS குழுவின் தீவிரவாத நடவடிக்கைகளால் நாட்டைவிட்டு வெளியேறிய கிறிஸ்தவர்கள்,  ஈராக் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவும் நோக்கத்தில், சொந்த நாடு திரும்பவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், ஈராக்கின் புதிய பிரதமர்.

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களைச் சந்தித்த வேளையில், கிறிஸ்தவர்களுக்கு இவ்வழைப்பை விடுத்த ஈராக்கின் புதிய பிரதமர், Mustafa Al-Kazemi அவர்கள், கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு உதவுதல், மற்றும், கிறிஸ்தவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல் என்ற உறுதிமொழிகளையும் வழங்கியுள்ளார்.

அமைதியில் நம்பிக்கைக் கொண்டு, அனைத்து வன்முறைகளையும் மறுக்கும் ஒரு புதிய ஈராக் நாட்டை கட்டியெழுப்புவதில், அனைத்து மத நம்பிக்கையாளர்களும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்ற நோக்கத்தில், வெளிநாடுகளில் வாழும் ஈராக் கிறிஸ்தவர்கள், சொந்த நாடு திரும்ப வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்துள்ள புதியப் பிரதமர், ஈராக்கின் கிறிஸ்தவர்களும் இந்நாட்டின் குழந்தைகளே என்பதை வலியுறுத்தியுள்ளார்.

ஈராக் நாட்டின் புதியப் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, பிரதமரின் அழைப்புக்குச் செவிமடுத்த  கர்தினால் சாக்கோ அவர்கள், பல கிறிஸ்தவர்கள், நாடு திரும்ப ஆவல் கொண்டுள்ளதாகவும், நாட்டில் நிலையான தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில், புதிய பிரதமர் எடுக்கும் முயற்சிகளுக்கு, தலத்திருஅவை அதிகாரிகள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ISIS இஸ்லாமியத் தீவிரவாத குழுவின் அச்சுறுத்தலால், 2014ம் ஆண்டு ஈராக்கிலிருந்து வெளியேறிய கிறிஸ்தவர்கள், தற்போது, தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப ஆவல் கொண்டாலும், பாதுகாப்பின்மையும், பணம் பறிக்கும் கும்பல்களின் நடவடிக்கைகளும், அச்சுறுத்தல்களும், அவர்களுக்குத் தடைகளாக இருப்பதாக Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2020, 13:41