நேர்காணல்: இந்திய புதிய தேசிய கல்விக்கொள்கை 2020
மேரி தெரேசா: வத்திக்கான்
இந்தியாவில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு, நடுவண் அரசு புதியதொரு கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த கல்விக்கொள்கை, அடுத்த பத்தாண்டுகளில் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும், இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ளது. இந்தக் கல்விக்கொள்கையை, ஆதரித்தும், எதிர்த்தும் நாடெங்கும் பெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன. தமிழ் வார இதழ் ஒன்று, இந்த புதிய கல்விக்கொள்கை குறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை அறிய சிலரைப் பேட்டிகண்டு ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில் அக்கொள்கைக்கு ஆதரவாக, அவர்களில் பலர் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த கல்விக்கொள்கையின் உள்ளடக்கமும், முன்வைக்கப்படும் முன்மொழிவுகளும் ஆபத்தானவை, எனவே தமிழக அரசு இதனை முற்றிலும் நிராகரிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக ஆயர் பேரவையின் கல்வி பாதுகாப்பு தேசிய கூட்டமைப்பு, இம்மாதம் 16ம் தேதி, தமிழகம் முழுவதும் 5,000 இடங்களில், இணையவழி ஆர்ப்பாட்டம் ஒன்றை, நடத்தியது. மீண்டும், இம்மாதம் 30ம் தேதி, அதாவது வருகிற ஞாயிறன்று, மாபெரும் முகநூல் பிரச்சாரம் ஒன்றையும், இந்த கூட்டமைப்பு நடத்தவுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அருள்பணி சேவியர் அருள்ராஜ் அவர்கள், இந்திய புதிய தேசிய கல்விக்கொள்கை 2020 பற்றி, வத்திக்கான் வானொலி நேயர்களுக்காக, வாட்சப் ஊடகம் வழியாக இன்று பகிர்ந்துகொள்கிறார். இந்தியாவில் அருள்பணியாளர் வழக்கறிஞர்களுள், மூத்த வழக்கறிஞராக இருப்பவர், இவர் ஒருவரே