தேடுதல்

Vatican News
பெங்களூரு, புனித ஜான் மருத்துவக் கல்லூரி பெங்களூரு, புனித ஜான் மருத்துவக் கல்லூரி 

பெங்களூருவில் கத்தோலிக்க கோவிட்-19 சிகிச்சை மையம்

பேராயர் பீட்டர் மச்சாடோ - கல்வியோ, மருத்துவமோ, எந்த துறையாக இருந்தாலும், வறியோர் மற்றும், தேவையில் இருப்போருக்கு உதவுவதற்கு, திருஅவை எப்போதும் முன்னுரிமை கொடுக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெங்களூரு, புனித ஜான் மருத்துவக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள,  அனைத்து வசதிகளும்கொண்ட, கோவிட்-19 சிகிச்சை பிரிவை, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள், ஆசிர்வதித்து திறந்து வைத்துள்ளார்.

இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவதற்கென, எல்லா மருத்துவ வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள, இந்த முதல் கத்தோலிக்க சிகிச்சைப் பிரிவில், தனித்து வைக்கப்படுவதற்கு 48 படுக்கைகளும், அவசர சிகிச்சைக்கென (ITU) 24 படுக்கைகளும், பொதுவான சிகிச்சைகளுக்கு 24 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 17, இத்திங்களன்று இந்தப் பிரிவை ஆசீர்வதித்து திறந்துவைத்த பேராயர்  பீட்டர் மச்சாடோ அவர்கள், கல்வியோ, மருத்துவமோ, எந்த துறையாக இருந்தாலும், வறியோர் மற்றும், தேவையில் இருப்போருக்கு உதவுவதற்கு, திருஅவை எப்போதும் முன்னுரிமை கொடுக்கின்றது என்றும், நம் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் தன்னலமற்ற சேவையை அளிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறினார்.  

இந்த கொள்ளைநோய் காலத்தில், நமது மருத்துவமனை, மக்களுக்கு நலவாழ்வை வழங்குவதற்கு மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை, நாட்டில் முதலில் எடுக்கப்பட்டுள்ள முதல் முயற்சி என்றும், இதனை இயலக்கூடியதாக அமைத்த அனைவருக்கும் வாழ்த்து என்றும், யூக்கா செய்தியிடம் கூறினார், பேராயர் மச்சாடோ.

புனித ஜான் மருத்துவ கல்லூரி, கடந்த ஐந்து மாதங்களில், கொரோனா கொள்ளைநோய் தொடர்பான இலவச சிகிச்சைகளுக்கு, ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு அதிகமாகவே செலவழித்துள்ளது என்பதையும், பேராயர் குறிப்பிட்டார். 

கடந்த ஜூலை மாத இறுதியில், காய்ச்சல் என்று வந்த 5000த்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கும், அவசர சிகிச்சைப் பிரிவில் இரண்டாயிரம் நோயாளிகளுக்கும், ICUவில் ஏறத்தாழ 500 பேருக்கும், 600க்கும் அதிகமான நோயாளிகளுக்கும் பெங்களூரு புனித ஜான் மருத்துவமனை சிகிச்சை அளித்துள்ளது. (UCAN)

21 August 2020, 12:51