தேடுதல்

Vatican News
உரோம் நகரிலுள்ள இறை இரக்கத்தின் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி உரோம் நகரிலுள்ள இறை இரக்கத்தின் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி  (Vatican Media)

5வது இறை இரக்க திருத்தூது மாநாடு தள்ளிவைப்பு

இவ்வாண்டு, ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 15ம் தேதி முடிய, Samoa-Apia உயர் மறைமாவட்டத்தில் நடைபெறவிருந்த 5வது இறை இரக்க திருத்தூது மாநாடு 2021ம் ஆண்டு நடைபெறும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு, ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 15ம் தேதி முடிய, ஓசியானியா பகுதியின் Samoa-Apia உயர் மறைமாவட்டத்தில் நடைபெறவிருந்த 5வது இறை இரக்க திருத்தூது மாநாடு 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 15ம் தேதி முடிய நடைபெறும் என்று இவ்வுயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

கோவிட் 19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நலவாழ்வு பிரச்சனைகளையும் நாடு விட்டு நாடு செல்வதற்கு மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று, இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான நைஜீரியா நாட்டு ஆயர் Martin Uzoukwu அவர்கள் கூறினார்.

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சமாவோ நாட்டின், சமாவோ-ஆப்பியா உயர் மறைமாவட்டத்தில், புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி அவையால் நடத்தப்படும் 5வது இறை இரக்க திருத்தூது மாநாடு, "இறை இரக்கம்: இவ்வுலகையே சூழ்ந்திருக்கும் அன்புப் பெருங்கடல்" என்ற தலைப்பில் நடைபெறும்.

2008ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முதல் 6ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெற்ற முதல் இறை இரக்க திருத்தூது மாநாட்டையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலகின் பல்வேறு நாடுகளில் இம்மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

2011ம் ஆண்டு, போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் இரண்டாவது மாநாடும், 2014ம் ஆண்டு கொலம்பியா நாட்டின் போகோட்டாவில் மூன்றாவது மாநாடும், 2017ம் ஆண்டு, பிலிப்பீன்ஸ் நாட்டின் மணிலாவில் நான்காவது மாநாடும் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

12 August 2020, 13:55