தேடுதல்

மணிலாவில் கோவிட்-19 சூழல் மணிலாவில் கோவிட்-19 சூழல் 

பிலிப்பீன்ஸ் நாடு குணமடைய தேசிய அளவில் செபம்

ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமையிலிருந்து, செப்டம்பர் 15ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும், பகல் 12 மணிக்கு, அருள்மிகப் பெற்றவரே வாழ்க என்ற செபத்தை, பத்து முறை செபிக்குமாறு, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாடு பல்வேறு பிரச்சனைகளிலிருந்து குணம் பெறவும், அந்நாட்டில் கோவிட்-19 கொள்ளைநோய் முடிவுறவும், தேசிய அளவில் இறைவேண்டல் நடவடிக்கை ஒன்றிற்கு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவான ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமையிலிருந்து, துயருறும் அன்னை மரியாவின் விழாவான, செப்டம்பர் 15ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் பகல் 12 மணிக்கு, அருள்மிகப் பெற்றவரே வாழ்க என்ற செபத்தை, பத்து முறை செபிக்குமாறு, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், அருள்பணித்துவ பயிற்சி கல்லூரி பேராசிரியர்கள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், துறவியர், கத்தோலிக்கர்  ஆகிய அனைவரும், இந்த இறைவேண்டல் பக்திமுயற்சியைக் கடைப்பிடிக்குமாறு, ஆயர்கள் அனைவரும் தங்களின் மேய்ப்புப்பணி மடலின் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.

ஆண்டவரோடு இணைந்திருக்கையில்...

கொரோனா கொள்ளைநோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளால், ஏறத்தாழ ஐந்து மாதங்களாக மக்கள், நோயின் அச்சத்திலும், இறப்பிலும், துன்புறுகின்றனர் என்றும், மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளையும், 20 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் வேலைகளையும் இழந்துள்ளனர் என்றும், 93 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில்கள் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிகளால் மக்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகியிருப்பதால், தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என்று கவலை தெரிவித்துள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்கள், கடவுள் நம் மன்றாட்டை எப்போதும் கேட்டருள்கிறார், மற்றும், அவரோடு இணைந்திருக்கையில் இயலாதது என்று, எதுவுமே இல்லை எனவும் மக்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்.  

அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரிகள், மருத்துவ அறிவியலில் நிபுணத்துவம் கொண்டவை அல்ல என்றும், இதனால், உலக அளவில் பாதித்துள்ள இந்த கொள்ளைநோயை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை, கத்தோலிக்க சமுதாயப் போதனைகள் என்ற கிணற்றிலிருந்து பருகுமாறும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

இந்தப் போதனைகள், தேவையற்ற மனச்சோர்விலிருந்தும், அச்சத்திலிருந்தும் விடுதலைபெற உதவும் என்றும், பிலிப்பீன்ஸ் ஆயர்களின் மடல் கூறுகிறது.

இதற்கிடையே, பிலிப்பீன்ஸ் நாட்டில் புதிய கல்வியாண்டு, ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு, இந்தத் தேதியை, தள்ளிவைக்குமாறு, பெற்றோர்கள் விண்ணப்பித்துள்ளனர். செனட் அவையும் இவ்விவகாரம் குறித்து கலந்துரையாடி வருகின்றது என செய்திகள் கூறுகின்றன.

ஆகஸ்ட் 14, இவ்வெள்ளி காலையில் வெளியான செய்திகளின்படி, பிலிப்பீன்சில் 1,47,526 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,426 பேர் இறந்துள்ளனர்.

14 August 2020, 13:16