தேடுதல்

Vatican News

கொலம்பன் சபையினர் வலையொளி வழி, “படைப்பின் காலம்”

நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமி பாதுகாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், உலகில் அனைத்து கிறிஸ்தவ சபைகளும், திருஅவை குழுமங்களும், படைப்பின் காலம் என்ற ஒரு நடவடிக்கையை, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பித்து வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வருகிற செப்டம்பர் மாதம் முதல் தேதி தொடங்கும் படைப்பின் காலத்தைச் சிறப்பிப்பதன் ஒரு முயற்சியாக, புனித கொலம்பன் மறைப்பணி சபையினர், podcast அதாவது வலையொளி சமுதாய ஊடகம் வழியாக, பல்லுயிர்களின் அழகு மற்றும், அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து எடுத்துரைப்பதற்குத் திட்டமிட்டு வருகின்றனர்.

நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமி பாதுகாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில், உலகில் அனைத்து கிறிஸ்தவ சபைகளும், திருஅவை குழுமங்களும், படைப்பின் காலம் என்ற ஒரு நடவடிக்கையை, ஒவ்வோர் ஆண்டும் சிறப்பித்து வருகின்றன.

படைப்பை பாதுகாப்பதற்கு இறைவேண்டல் செய்யும் உலக நாளான செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, சுற்றுச்சூழலின் பாதுகாவலராகிய, அசிசி நகர் புனித பிரான்சிஸ் விழாவான அக்டோபர் 4ம் தேதி வரை, இந்தக் காலம் சிறப்பிக்கப்படுகிறது. செப்டம்பர் 01,  வருகிற செவ்வாயன்று தொடங்கும் 'படைப்பின் காலம் 2020' , 'இந்த பூமிக்கோளத்தின் யூபிலி' என்ற மையக்கருத்துடன் கொண்டாடப்படுகிறது.

ஒரு மாதம் சிறப்பிக்கப்படும் இந்த படைப்பின் காலத்தில், அனைத்துக் கிறிஸ்தவர்களும், பல்வேறு செயல்முறைகள் வழியாகப் பங்கெடுக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

“இந்த பூமிக்கோளத்தின் யூபிலி” வலையொளித் தொடர்கள்

புனித கொலம்பன் சபையினர், இந்த படைப்பின் காலத்தை, “இந்த பூமிக்கோளத்தின் யூபிலி – வலையொளியில் பல்லுயிர்கள் மற்றும், நம் புனித வரலாறு” என்ற தலைப்பில் ஆறு வலையொளித் தொடர்கள் வழியாகச் சிறப்பிக்கவுள்ளனர்.

ஒவ்வொரு தொடரும் ஏறத்தாழ 15 நிமிடங்கள் கொண்டது என்றும், இதனை, ஆகஸ்ட் 31, வருகிற திங்களன்று வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

 ஒலி மற்றும், காணொளி வழியாக பதிவுசெய்யப்படும் இந்த வலையொளித் தொடர்களை, வாஷிங்டன் நகரிலுள்ள புனித கொலம்பன் சபையின் நீதி, அமைதி மற்றும், படைப்பின் ஒருங்கமைவு அலுவலகமும், அயர்லாந்து, இங்கிலாந்து, பிலிப்பீன்ஸ், ஹாங்காக், தென் கொரியா, மியான்மார் போன்ற பல்வேறு நாடுகளில் மறைப்பணியாற்றும் அச்சபையினரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

கத்தோலிக்க திருஅவையின் சமுதாய கோட்பாடுகள் மற்றும், கொலம்பன் சபையினரின் அனுபவத்தை அடித்தளமாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆறு வலையொளித் தொடர்களும், நம் பொதுவான இல்லத்தை எவ்வாறு பாதுகாப்பது, பல்லுயிர்கள், நம் வாழ்வுக்கு எவ்வளவு முக்கியம் போன்றவற்றை எடுத்துரைக்கின்றன.

புனித கொலம்பன் மறைப்பணி சபையினர், 15 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

29 August 2020, 14:16