தேடுதல்

Vatican News
ஜப்பான் பிரதமருடன் திருத்தந்தை (25.11.2019) ஜப்பான் பிரதமருடன் திருத்தந்தை (25.11.2019) 

வறுமைக்குரிய தீர்வாக அணுவாயுத ஒழிப்பு இருக்க முடியும்

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி நாகாசாகி நகரிலும் அணுக்குண்டுகள் வீசப்பட்டதன் 75ம் ஆண்டு நினைவு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

ஜப்பான் நாட்டில் அணுக்குண்டு வீசப்பட்டதன் 75ம் ஆண்டு இந்த ஆகஸ்ட் மாதத்தில் நினைவுகூரப்படுவதையொட்டி, அனைத்து அணு ஆயுதங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, திருஅவையின் கொலம்பன் மறைபோதக சபை.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி நாகாசாகி நகரிலும் அணுக்குண்டுகள் வீசப்பட்டதன் விளைவாக, இரண்டு இலட்சத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்போதிருந்தே, பல நாடுகள் அணு ஆயுத ஒழிப்பிற்குக் குரல் கொடுத்து வருகின்றன.

அணுக்குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டோர், மற்றும், அணு கதிர்வீச்சால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் மக்கள் குறித்து கவலையை வெளியிட்ட, கொலம்பன் மறைபோதக சபை, இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக, அணு ஆயுத ஒழிப்பு மட்டுமே இருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு, அமைதி, மற்றும், நிலையான தன்மைக்குரிய மனித ஏக்கத்திற்கு அணு ஆயுதம் தீர்வைத் தரமுடியாது என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு, ஜப்பானில் மேற்கொண்ட திருத்தூது பயணத்தின்போது எடுத்துரைத்ததை சுட்டிக்காட்டியுள்ள இந்த மறைபோதக சபை,  இன்றைய உலகில், இலட்சக்கணக்கான குழந்தைகள் உண்ண உணவின்றி வாடும்போது, கோடிக்கணக்கான பணத்தை அணு ஆயுத தயாரிப்பு, மேம்பாடு, மற்றும், அணு ஆயுத வர்த்தகத்தில் வீணடிப்பது தவறு என்று திருத்தந்தை கூறிய வார்த்தைகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.

இன்றைய உலகில் பாதுகாப்புக் கொள்கைகள் என்ற பெயரில், பல நாடுகள் மேற்கொண்டுவரும் திட்டங்கள், உண்மையில் மக்களின் வாழ்வுக்குப் பாதுகாப்பற்ற ஒரு நிலையையே உருவாக்கிவருகின்றன எனக்கூறும், இந்த கத்தோலிக்க மறைபோதக சபை, மற்றவர்களைக் கொல்வதன் வழியாகவே பாதுகாப்பைக் கைக்கொள்ளமுடியும் என்பதை அடிப்படையாகக் கொண்ட இக்கொள்கைகள், மனிதரின் அடிப்படை வாழ்வுக்குத் தேவையான பொருளாதாரத்தையும் தங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்கிறது.

இதற்கிடையே, Pax Christi என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பும், அணு ஆயுதங்கள் ஒழிப்பு, குறித்து தன் குரலை எழுப்பியுள்ளது.(ICN)

04 August 2020, 14:06