தேடுதல்

Vatican News
2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பாக மக்கள் 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பாக மக்கள்  

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால், நாங்கள், தூய்மையான காற்றை அனுபவிக்கிறோம், நீரின் தன்மையும் மேம்பட்டுள்ளது, மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது - தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலைக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் சரியாகச் செயல்பட்டிருப்பது, மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கின்றது என்று, தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் அந்தோனி பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு விதித்த தடை உத்தரவு நீடிக்கும் என்றும், அந்த ஆலையை, மீண்டும் திறக்க அனுமதி இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம், இம்மாதம் 18ம் தேதி வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவித்த, ஆயர் ஸ்டீபன் அவர்கள், மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் மாசடைய, இந்த ஆலை காரணமாக இருந்தது என்று கூறினார்.

இந்த ஆலை நிர்வாகிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அக்கறையற்று இருந்ததால், அதிலிருந்து வெளியேறிய கழிவுகளால், நிலத்தடி நீர், மண்வளம், சூழலியல் போன்ற அனைத்தும் மாசடைந்தன என்றும், ஆயர் ஸ்டீபன் அவர்கள் தெரிவித்தார்.

இந்த மாசுகேட்டின் தாக்கம் எவ்வளவு இருந்ததென்றால், அதனால் மழை சரியாகப் பெய்யவில்லை, பெருமளவான மக்கள், புற்றுநோய், மூச்சுத்திணறல், தோல் வியாதிகள், காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் தாக்கப்பட்டனர் என்றும், தூத்துக்குடி ஆயர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆலை மூடப்பட்டிருப்பதால், நாங்கள், தூய்மையான காற்றை அனுபவிக்கிறோம், நீரின் தன்மையும் மேம்பட்டுள்ளது, மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது என்றும் கூறிய ஆயர் ஸ்டீபன் அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கமுடியாது என்று, சென்னை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, தான் முழுமனதோடு வரவேற்பதாகக் கூறினார். 

இந்த ஆலையை மூட வலியுறுத்தி, அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு கத்தோலிக்கர் உட்பட, 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், ஓர் அருள்பணியாளர் உள்ளிட்ட, 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, 2018ம் ஆண்டு மே மாதத்தில், இந்த ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து, அந்த ஸ்டெர்லைட் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆகஸ்ட் 18ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்க இயலாது என்று தீர்ப்பு வழங்கினர். 

இலண்டனை தலைமையிடமாகக் கொண்ட வேதாந்தா குழுமம், 1994ம் ஆண்டில், தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையைத் தொடங்கியது. (UCAN)

25 August 2020, 14:38