தேடுதல்

Vatican News
கோவிட்-19 காலத்தில் உணவு உதவிகள் கோவிட்-19 காலத்தில் உணவு உதவிகள்  (ANSA)

அசாமில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி

தற்போதைய நெருக்கடிகளால், மூன்றாம் பாலினத்தவர், ரிக்சா ஓட்டுனர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தினக்கூலிகள் போன்றோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் - NEDSSS இயக்குனர், அருள்பணி Velickakam

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில், அண்மையில் இடம்பெற்ற பெருவெள்ளம் மற்றும், கோவிட்-19 கொள்ளைநோயால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்குத் தேவைப்படும் அடிப்படை உதவிகளை ஆற்றிவருகிறது, அம்மாநில கத்தோலிக்கத் திருஅவை.

இந்தியாவில், கொரோனா கொள்ளைநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான அசாமில், மக்களின் நலவாழ்வு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்வுமுறையும், கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ள, இந்தியாவின் வடகிழக்கு மறைமாவட்ட சமுதாயநல அமைப்பின் (NEDSSS) இயக்குனர் அருள்பணி Varghese Velickakam அவர்கள், இம்மக்களுக்கு, பிரிந்த கிறிஸ்தவ சபை மற்றும், ஏனைய சமயக் குழுக்களுடன் இணைந்து உதவிசெய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கொள்ளைநோய்க் கட்டுப்பாடுகள் உருவாக்கியுள்ள நலவாழ்வு மற்றும், பொருளாதார பிரச்சனைகளால், மிகவும் துன்புறும், 43,738 குடும்பங்களுக்கு, தலத்திருஅவையின் சமுதாயநல அமைப்பு உதவி வருவதாகவும், அருள்பணி Velickakam அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறினார்.

தற்போதைய நெருக்கடிகளால், மூன்றாம் பாலினத்தவர், ரிக்சா ஓட்டுனர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தினக்கூலிகள் போன்றோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அருள்பணி Velickakam அவர்கள் கூறினார்.

இதற்கிடையே, ஏறத்தாழ 3 கோடியே 20 இலட்சம் மக்களைக் கொண்ட அசாம் மாநிலத்தில், கடந்த ஏப்ரல் முதல் தேதி, கொரோனா கொள்ளைநோய் பரவத்தொடங்கிய சமயத்தில், புலம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து பிரச்சனைகள் நிலவிவந்தன.

தற்போது கொள்ளைநோய் உருவாக்கியுள்ள அச்சம், தனிமைப்படுத்தப்படல் போன்றவை உட்பட, மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு, கோபம், மனச்சோர்வு, புறக்கணிக்கப்படல் போன்ற உணர்வுகள் மேலும் அதிகரித்துள்ளன என்று, ஆசியச் செய்தி கூறுகின்றது. (AsiaNews)

29 August 2020, 14:01