தேடுதல்

Vatican News
பிலிப்பீன்ஸ் நாட்டில், கோவிட்-19 கொள்ளைநோய் இலவச பரிசோதனைகள் பிலிப்பீன்ஸ் நாட்டில், கோவிட்-19 கொள்ளைநோய் இலவச பரிசோதனைகள்  

பிலிப்பீன்சில் தற்கொலைகள் குறைய, திருஅவையின் உதவிக்கு

ஆலயம் சென்று திருப்பலியில் பங்குகொள்ள அதிக மக்கள் அனுமதிக்கப்படுவது, அவர்கள் ஆன்மீக அளவில் செறிவூட்டப்பட உதவும் – பிலிப்பீன்ஸ் ஆயர் Broderick Pabillo

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில், கோவிட்-19 கொள்ளைநோய் பரவத்தொடங்கிய காலத்திலிருந்து, உருவாகிய பொருளாதார நெருக்கடிகளால், தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, இந்த நிலைமையை மாற்றியமைக்க, ஆன்மீகத் தலைவர்களின் உதவிக்கு, அந்நாட்டு அமைப்பு ஒன்று, விண்ணப்பித்துள்ளது.

ஆகஸ்ட் 23, இஞ்ஞாயிறன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, பிலிப்பீன்சின் தொற்று நோய் கால நெருக்கடிநிலைகளை கண்காணிக்கும் அமைப்பின் (IATF) உறுப்பினர் Menardo Guevarra அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

இந்த அழைப்பு குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Pablo Virgilio David அவர்கள், மனத்தளர்ச்சியால் துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கு, மறைமாவட்டங்கள், வலைத்தளம், அல்லது, தொலைப்பேசி வழியாக, உளவியல் ஆலோசனை வழங்கும் அமர்வுகளை நடத்தலாம் என்று கூறினார்.

மனிலா அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Broderick Pabillo அவர்கள் கூறுகையில், ஆலயம் சென்று திருப்பலியில் பங்குகொள்ள அதிகம் பேர் அனுமதிக்கப்படுவது, அவர்கள் ஆன்மீக அளவில் செறிவூட்டப்பட உதவும் என்று தெரிவித்தார்.

பிலிப்பீன்சில் தாங்களாகவே உயிரை மாய்த்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் அளவில் உள்ளது என்று, அந்நாட்டின் தொற்று நோய் கால நெருக்கடிநிலைகளை கண்காணிக்கும் அமைப்பின் (IATF) தலைவர் Carlito Galvez அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதை முன்னிட்டு, Guevarra அவர்கள், இதற்கு திருஅவைத் தலைவர்களின் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மனச்சோர்வு, கவலை, மனக்குழப்பம் போன்றவற்றால் துன்புறும் குடிமக்களுக்கு, உளவியல் ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குமாறு, கத்தோலிக்கத் திருஅவை, மற்றும், ஏனைய சமயக் குழுக்களை, Guevarra அவர்கள்,   கேட்டுக்கொண்டுள்ளார்.

தீர்வு காணமுடியாததுபோல் தோன்றும் கோவிட்-19 கொள்ளைநோய் தாக்கத்தின் மிக இக்கட்டான சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், இவ்வேளையில் நம்பிக்கையும், ஆன்மீக உணவும் தேவைப்படுகின்ற குடிமக்களுக்கு ஆன்மீகத் தலைவர்கள் உதவுமாறு, ஆகஸ்ட் 23, இஞ்ஞாயிறன்று செய்தியாளர் கூட்டத்தில் Gueverra அவர்கள் கேட்டுக்கொண்டார்.

WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையிலும், கொரோனா கொள்ளைநோய் பரவத்தொடங்கிய காலத்திலிருந்து, பிலிப்பீன்சில், மனநலக் குறைவும், நன்னெறியற்றநிலையும், வெகுவாய் அதிகரித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சில், கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, மனநலப் பிரச்சனை தொடர்பான, 30 முதல் 35 வரையிலான தொலைப்பேசி அழைப்புகளை, அந்நாட்டு மனநல அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் பெற்றனர் என்றும், இந்த எண்ணிக்கை, 2019ம் ஆண்டு மே மாதம் முதல், 2020ம் ஆண்டு பிப்ரவரி வரை, 13 முதல் 15 ஆக இருந்தது என்றும், WHO நிறுவனம் கூறியுள்ளது. (UCAN)  

25 August 2020, 14:05