தேடுதல்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-35

கடவுளின் இரக்கம், அவரில் நம்பிக்கை வைப்பதன் வழியாக, அவரில் முழுமையாகச் சரணடையச் செய்கின்றது. பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருவரது வாழ்வு மாறுவது, தூயவாழ்வில் பற்றுக்கொள்வது எல்லாமே கடவுளின் இரக்கத்தின் பலனே - திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்

“கடவுள் இரக்கமுள்ளவர்”, “கடவுளின் பெயர் இரக்கம்” என்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நம்பிக்கைக்கு மூலைக்கல்லாகவும், அவரது பாப்பிறை தலைமைத்துவப் பணியின் மையமாகவும் அமைந்துள்ளது. திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களும், தனது தலைமைப்பணிக் காலத்தில் இறைஇரக்கம் பற்றி பலமுறை பேசியுள்ளார். அவர், இறைஇரக்க ஞாயிறை திருவழிபாட்டில் இணைத்திருப்பை வைத்தே, அவரது இறைஇரக்க பக்தி எவ்வளவு ஆழமானது என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். உருவாக்கினார். திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களும், தனது 33 நாள்கள் தலைமைப்பணியில், கடவுளின் இரக்கம் பற்றி மூன்று முறை பேசியுள்ளார். 1978ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, அவர் தனது புதன் பொது மறைக்கல்வியுரையில், கடவுளின் இரக்கம், அவரில் நம்பிக்கை வைப்பதன் வழியாக, அவரில் முழுமையாகச் சரணடையச் செய்கின்றது. பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருவரது வாழ்வு மாறுவது, தூயவாழ்வில் பற்றுக்கொள்வது எல்லாமே கடவுளின் இரக்கத்தின் பலனே. திருஅவையும், தன் விசுவாசிகளை அணுகும்போது, அவர்களிடம் அன்புடன் இருக்கவேண்டும். இவ்வாறு திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் கூறியுள்ளார். இவர் மிகத்திறமையான எழுத்தாளர் மற்றும், மிகவும் கனிவுள்ளவர் என்றும் பாராட்டப்படுகிறார்.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், 1978ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி ஆற்றிய மூவேளை செப உரையில், சமுதாயத்தில் பிறரன்பு மற்றும், இரக்கச் செயல்களை ஆற்றுவதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். 1978ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, தனது புதன் பொது மறைக்கல்வியுரையிலும், கடவுளின் இரக்கம் பற்றி உரையாற்றினார். கடவுள் நம்மீது வைத்துள்ள பேரன்பினால், நாம் என்றென்றும் மகிழ்வாய் இருப்பதற்கு அவர் உதவுகிறார். அவர் அளவில்லா நன்மைத்தனம் உள்ளவர். நமக்கு, மற்றவரை அன்புகூர்வது கடினமாக இருக்கலாம், மற்றவர், நமக்கு பிடிக்காதவர்களாக இருக்கலாம், அவர்கள் நம்மைப் புண்படுத்தியிருக்கலாம், ஆனாலும், சமுதாயத்தில், ஒன்றிப்பு மற்றும் அமைதி நிலவுவதற்கு, சகோதரர், சகோதரிகளுக்கு இடையே மன்னிப்பு முக்கியம் என்று திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் கூறியுள்ளார். மேலும், உடலளவிலும், ஆன்மீக அளவிலும், ஆற்றவேண்டிய ஏழு இரக்கச் செயல்கள் பற்றியும் அவர் கூறியுள்ளார். இந்த இரக்கச்செயல்கள், உலக அளவில் அவ்வப்போது இடம்பெறும் மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மாறும் என்றும்,  திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் கூறியுள்ளார்.   

ஒருமுறை விளையாட்டு பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், “இக்காலத்தில் விளையாடுவது மிக முக்கியமாக மாறி வருகிறது. ஏனெனில் இது நேர்மை, விடாமனஉறுதி, நட்பு, பகிர்வு, தோழமை போன்ற மிக முக்கியமான விழுமியங்களை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள அவர்களை ஊக்குவிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். 1978ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி, குவாத்தமாலா கர்தினால் Mario Casariego y Acevedo அவர்கள், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை, 1979ம் ஆண்டில் தன் நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், தனது ஏனைய திட்டங்களால் இந்த அழைப்பை ஏற்க இயலவில்லை என்று, திருத்தந்தை கூறியுள்ளார். ஆனால், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, தனது 65வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

கத்தோலிக்கத் திருஅவை மற்றும், வத்திக்கான் நாட்டின் தலைவராக, 33 நாள்களே தலைமைப் பணியாற்றிய திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், தனது படுக்கைக்கு அருகில் விளக்கு எரிந்துகொண்டிருக்க, ஏதோ ஒன்றை வாசித்தவண்ணம் இறந்து காணப்பட்டார் என்றும், அந்த இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அவரது அடக்கச்சடங்கு, 1978ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது. பின்னர், அவரது உடல், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ்தளத்தில் அடக்கம் பண்ணப்பட்டது.

நான்கு கர்தினால்கள் உட்பட 226 பிரேசில் நாட்டு ஆயர்கள், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களுக்கு விடுத்த விண்ணப்பத்தின்பேரில், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகள், 1990ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. ஏறத்தாழ 3,600 பக்கங்கள் கொண்ட ஐந்து தொகுப்புகள், புனிதர்நிலைக்கு உயர்த்தும் பணிகளை ஆற்றும் பேராயத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் வீரத்துவ நற்பண்புகளை ஏற்று, அவரை வணக்கத்துக்குரியவர் என அறிவித்தார். திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் பரிந்துரையால், அர்ஜென்டீனா நாட்டு புவனோஸ் அய்ரஸ் நகரில், புதுமை ஒன்று இடம்பெற்றுள்ளதாக, 2016ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அவர் விரைவில் அருளாளராக அறிவிக்கப்படும் நாளை, பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலகில், குறிப்பாக, இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், இரக்கம், கருணை, பரிவன்பு போன்ற பண்புகள் நம்மில் அதிகம் தேவைப்படுகின்றன. திருத்தந்தையரும், திருஅவையும் இந்தப் பண்புகளை அதிகமதிகமாக வலியுறுத்தி வருகின்றனர். நாம் அனைவரும், பரிவன்பில் வளருவோம். இவ்வாறு கேட்டுக்கொண்டு, 2017ம் ஆண்டு சனவரி 11ம் தேதி புதன்கிழமையன்று ஆரம்பித்த, திருஅவை வரலாறு பற்றிய சாம்பலில் பூத்த சரித்திரம் என்ற, இந்த தொடர் நிகழ்ச்சியை, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 12, இப்புதன்கிழமையோடு நிறைவுசெய்கின்றோம். உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2020, 12:50