ஊழலுக்கும் வன்முறைக்கும் எதிரான போராட்டத்திற்கு அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஆகஸ்ட் 17, இத்திங்களன்று, இந்தோனேசிய நாடு, தன் சுதந்திர தினத்தைக் கொண்டாடியதை முன்னிட்டு, சிறப்புச் செய்தியை வெளியிட்டுள்ள அந்நாட்டு கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo அவர்கள், ஊழலுக்கும், வன்முறைக்கும் எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் பேராயர், கர்தினால் Suharyo அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஊழல், மற்றும், வன்முறைக்கு எதிராக, அனைத்து இந்தோனேசிய மக்களும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்,
கோவிட் அச்சம் காரணமாக, இந்த ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், ஆடம்பரமின்றி, கணணி வலைத்தொடர்புகள் வழியாக மட்டுமே, பல நாடுகளைப்போல், இந்தோனேசியாவில் கொண்டாடப்பட்டதையொட்டி, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கர்தினால் அவர்கள், கொண்டாட்டங்களில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள், கொள்கைகளில் எவ்வித மாற்றங்களையும் குறிக்கவில்லை, எனக் கூறியுள்ளார்.
காணொளி வழியாக சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை வெளியிட்ட கர்தினால் Suharyo அவர்கள், தேசியக் கொள்கைகளான ஒன்றிப்பு, இறையாண்மை, நீதி, மற்றும், வளமை ஆகியவற்றை மையப்படுத்தி, பொதுநலனுக்காக உழைக்கவேண்டியது, அனைவரின் கடமை என அதில் கூறியுள்ளார்.
இந்தோனேசிய நாட்டில் இடம்பெறும் ஊழல், வன்முறை, சுற்றுச்சூழல் அழிவு ஆகியவை, நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஆபத்தாக உள்ளன என்பதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் Suharyo. (UCAN)