தேடுதல்

Vatican News
கனடா கத்தோலிக்க பழங்குடி இன  அவை உறுப்பினர்கள் கனடா கத்தோலிக்க பழங்குடி இன அவை உறுப்பினர்கள் 

கனடா ஆயர்கள்: பழங்குடி இன மக்களுடன் ஒருமைப்பாடு

2016ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, கனடாவில், 16 இலட்சத்திற்கு அதிகமான பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர், இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 4.9 விழுக்காடாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பழங்குடி இன மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும், தேசிய இறைவேண்டல் நாளுக்கென்று, கனடா நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குவாதலூப்பே அன்னை மரியா விழாவான டிசம்பர் 12ம் தேதியன்று, பழங்குடி இன மக்களுடன் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும், தேசிய இறைவேண்டல் நாளை, கனடா ஆயர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

ஒருமைப்பாட்டுணர்வுக்கு அழைப்பு

“பூமியைக் குணப்படுத்துதல்” என்ற தலைப்பில், வருகிற டிசம்பர் 12ம் தேதி சிறப்பிக்கப்படும், தேசிய இறைவேண்டல் நாளை முன்னிட்டு, ஆயர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், கடவுளின் படைப்புகள் அனைத்தோடும் ஒன்றிணைந்து, அவற்றை மதித்து, பாதுகாத்து, மற்றும், பேணி வளர்க்கவேண்டும் என்ற விண்ணப்பம் விடுக்கப்பட்டுள்ளது.   

உலகில் வாழ்கின்ற, பழங்குடி இன மக்கள் அனைவரின் படைப்புக் கதைகள் பற்றி, தங்கள் செய்தியில் நினைவுகூர்ந்துள்ள கனடா ஆயர்கள், கடவுள் உலகை எவ்வாறு உருவாக்கினார், அவற்றை உருவாக்கியதன் நோக்கம், அவற்றின் நன்மைத்தனம், அவற்றோடு நமக்குள்ள உறவு போன்ற எல்லாவற்றையும், பழங்குடி மக்களின் கதைகள், நமக்குக் கற்றுத்தருகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.

பூமி கடவுளின் கொடை

நாம் இந்த பூமியை பாதுகாக்கவேண்டியவர்கள் மட்டுமே என்பதையும், அதனோடு உள்ள உறவை மேம்படுத்தவேண்டும் என்பதையும், நாம் உணர்ந்திருக்கவேண்டும் என்று கூறியுள்ள ஆயர்கள், இந்தப் பூமியை, கடவுளிடமிருந்து பெற்ற கொடையாக, நாம் நோக்கவேண்டும் என்ற கத்தோலிக்கத் திருஅவையின் போதனை, மேலும் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சூழலியல் மனமாற்றத்திற்கு விடுத்திருக்கும் அழைப்பையும் குறிப்பிட்டுள்ள ஆயர்களின் செய்தி, பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாதுகாக்க, நாம் எல்லாரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

2016ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, கனடாவில், 16 இலட்சத்திற்கு அதிகமான பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர், இவர்கள், நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 4.9 விழுக்காட்டினர் ஆவர்.

19 August 2020, 13:11