தேடுதல்

Vatican News
பொலிவியா நாட்டு மருத்துவமனை வாசலில் பொலிவியா நாட்டு மருத்துவமனை வாசலில்  

நோயாலும், வன்முறைகளாலும், துன்புறும் பொலிவியா

பொலிவியா ஆயர்கள் : தன்னலம் சார்ந்ததாக அல்லாமல், பிறர் நலம் நாடுவதாக ஒவ்வொருவரின் அணுகுமுறையும் இருக்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தில் தீவிர மோதல்களையும், நல நெருக்கடிகளையும் சந்தித்துவரும், பொலிவியா நாட்டில், பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க தலத்திருஅவை எப்போதும் தயாராக இருப்பதாக, அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

தன்னலம் சார்ந்ததாக அல்லாமல், பிறர் நலம் நாடுவதாக ஒவ்வொருவரின் அணுகுமுறையும் இருக்கவேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிவியா நாட்டு ஆயர்கள், எங்கெங்கு தேவையோ, அங்கெல்லாம் உரையாடல்களை ஊக்குவிக்கவும், இன்றைய நிலைகள் குறித்த மக்களின் சிந்தனைக்கு ஊக்கமளிக்கவும், தாங்கள் செயல்பட்டுவருவதாகக் கூறியுள்ளனர்.

பல்வேறு சங்கங்களின் தலைவர்கள், தங்கள் வன்முறை நடவடிக்கைகளைக் கைவிட்டு, அமைதியை நிலைநாட்டும் உரையாடல்களை மேற்கொள்ள முன்வரவேண்டும் என அழைப்புவிடுக்கும் பொலிவியா ஆயர்கள், தங்கள் தவறான நடவடிக்கைகளால் பொலிவிய வாழ்வுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் ஆபத்தை உருவாக்க எவருக்கும் உரிமையில்லை எனவும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஏற்கனவே பொருளாதாரச் சரிவைச் சந்தித்துவரும் பொலிவியா நாட்டில், கோவிட் -19 தொற்று நோயின் தாக்கத்தால் உயிரிழப்புக்கள் தொடர்ந்துவரும் நிலையில், அரசியல் குழுக்களின் வன்முறை அதிகரிப்பு, நாட்டை மேலும் பெரும் சரிவை நோக்கி இழுத்துச் செல்கின்றது, என ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

தற்போதைய நிலவரப்படி, பொலிவியா நாட்டில், 91,000 பேர் கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும், 3000க்கும் அதிகமானோர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

11 August 2020, 13:08