தேடுதல்

Vatican News
பேராயர் Guido Filipazzi பேராயர் Guido Filipazzi  

இளைஞர்கள், அமைதியில் வாழும்முறையை மறக்கக்கூடும்

நைஜீரியாவின் சுதந்திர நாளுக்கு முந்திய நாளான ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்து, தேசிய நாளான அக்டோபர் முதல் தேதி வரை, 40 நாள்கள் இறைவேண்டல் பக்திமுயற்சி ஒன்று கடைப்பிடிக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நைஜீரியாவில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்குக் கொணர்ந்து, நாடெங்கும் சட்டம், ஒழுங்குமுறைகளை உறுதியாக நடைமுறைப்படுத்தவும்,  இளைஞர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் வேண்டும் என்று, அந்நாட்டு திருப்பீடத் தூதர், அரசை வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தற்போதைய நிலவரம் குறித்து, வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, பேராயர் Guido Filipazzi அவர்கள், நைஜீரியாவின் வடபகுதியில் இடம்பெறும் பயங்கரவாத வன்முறைகளே அதிகம் பேசப்படுகின்றது, ஆனால், அந்நாடு முழுவதும் பரவியுள்ள மற்ற வன்முறைகளால் ஏற்படும் இழப்புகள் குறித்து பேசப்படுவதில்லை என்று கூறினார்.

நைஜீரியாவில், இனங்களுக்கிடையே மோதல்களும், ஆள்கடத்தல்களும் இடம்பெறுகின்றன, அந்நாடு அமைந்துள்ள அட்லாண்டிக் பெருங்கடலில், கடல்கொள்ளையர்களின் அட்டூழியங்கள், கப்பல்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் ஆபத்தாக உள்ளன என்பதையும், பேராயர் Filipazzi அவர்கள் எடுத்துரைத்தார்.

நைஜீரியாவின் மத்திய மற்றும், வடமேற்குப் பகுதியின் கிராமங்களில், கடந்த சனவரியிலிருந்து, 1,200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இவர்கள், ஆயுதம் ஏந்திய குழுக்களின் தாக்குதல்கள் மற்றும், கடத்தல்களுக்குப் பலியானவர்கள் என்றுரைத்த பேராயர் Filipazzi அவர்கள், Amnesty International போன்ற, பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், மத்திய அரசின் கையாலாகாத தன்மையைக் குறைகூறி வருகின்றன என்றும் கூறினார்.

இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொணர்வதற்கு, அனைவரும், அரசையே எதிர்பார்த்துள்ளனர் என்றும், நாட்டில், பொதுவாக, சட்டம் வலியுறுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் கூறிய பேராயர் Filipazzi அவர்கள், அந்நாட்டில் இடம்பெறும், வன்முறையும், ஊழலும் முடிவுக்குக்கொண்டுவரப்பட, அந்நாட்டு ஆயர்கள், நாற்பது நாள்கள் இறைவேண்டல் நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியிருப்பதையும் குறிப்பிட்டார்.

நைஜீரியாவின் சுதந்திர நாளுக்கு முந்திய நாளான ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்து, தேசிய நாளான அக்டோபர் முதல் தேதி வரை, இந்த இறைவேண்டல் பக்திமுயற்சி கடைப்பிடிக்கப்படுகிறது.

29 August 2020, 13:58