தேடுதல்

Vatican News
பேராயர் Tadeusz Kondrusiewicz பேராயர் Tadeusz Kondrusiewicz  

மின்ஸ்க் நகர் சிறைக்கு முன்பாக செபம்

பெலாருஸ் நாட்டில், மிகவும் இன்னல்நிறைந்த சூழல்களை எதிர்கொள்ளும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், தடுப்புக்காவல் மையத்திற்கு முன்பாக, இறை இரக்க இயேசுவிடம், பேராயர் Kondrusiewicz அவர்கள் செபித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டில், இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, போராட்டங்கள் இடம்பெற்றுவரும்வேளை, அமைதியை விரும்பும் குடிமக்களுக்கு ஆதரவாக, மின்ஸ்க் நகரின் சிறப்பு சிறைக்கு முன்பாக, அந்நாட்டு திருஅவை அதிகாரி ஒருவர் இறைவேண்டல் செய்துள்ளார்,

போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஒடுக்குவதற்காக, தனியாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் மையம் சென்று, அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்திப்பதற்கு, பெலாருஸ் ஆயர் பேரவைத் தலைவரான பேராயர் Tadeusz Kondrusiewicz அவர்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, அவர், அந்த சிறைக்கு முன்பாகச் செபித்தார்.

பேராயர் Kondrusiewicz அவர்கள், மின்ஸ்க் நகர் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு மற்றும், நல்ல சமாரியர் மனிதாபிமான அமைப்பின் பணியாளர்களோடு, "துன்பம் மற்றும், பாடுகள்” என்று விவரிக்கப்பட்டுள்ள, அந்த தடுப்புக்காவல் மையத்திற்குச் சென்று, அதற்கு முன்பாக மண்டியிட்டு மன்றாடினார். 

மிகவும் இன்னல்நிறைந்த சூழல்களை எதிர்கொள்ளும் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில், இறை இரக்க இயேசுவிடம் மன்றாடும், மாலை 3 மணிக்கு, மழையையும் பொருட்படுத்தாது, பேராயர் Kondrusiewicz அவர்கள், அவ்விடம் சென்று செபித்து, மக்களுடன் திருஅவைக்கு இருக்கின்ற  தோழமையுணர்வை வெளிப்படுத்தினார். பேராயருடன், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகியோரும் சேர்ந்து செபித்தனர்.

இந்த இறைவேண்டலுக்குப்பின், பேராயர் Kondrusiewicz அவர்கள், ஏறத்தாழ ஒரு மணி நேரம், அந்த சாலையில் நடந்து, சிறையிலிருந்து விடுதலைபெற்ற சிலர் உட்பட, பலரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பெலாருஸ் நாட்டில், ஏறத்தாழ 26 ஆண்டுகள் அரசுத்தலைவர் பதவியில் இருக்கின்ற, Alexander Lukashenko அவர்கள், இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில், ஏறத்தாழ 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றிபெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அந்நாட்டில், போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. (AsiaNews)

21 August 2020, 12:46