தேடுதல்

Vatican News
பெலாருஸ் நாட்டில் எதிர்க்கட்சி ஊர்வலம் பெலாருஸ் நாட்டில் எதிர்க்கட்சி ஊர்வலம் 

பெலாருஸ் பேராயர் Kondrusiewicz, பிரதமர் சந்திப்பு

மேய்ப்புப்பணியாளர்களாகிய நாங்கள், யாரையும் தீர்ப்பிடுவதற்காகச் செயல்படவில்லை, மாறாக, குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் மனம் மாறவேண்டும் என்று அழைப்புவிடுப்பதற்காகப் பணியாற்றுகிறோம் - பெலாருஸ் பேராயர் Kondrusiewicz

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டில் அரசுத்தலைவருக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் மோதல்களுக்கு, அமைதியான முறையில் தீர்வு காணும் நோக்கத்தில், அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர், பெலாருஸ் நாட்டின் இடைக்கால பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பெலாருஸ் தலைநகர் மின்ஸ்க் பேராயர் Tadeusz Kondrusiewicz அவர்கள், இடைக்கால பிரதமர் Yuri Karaev அவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு விடுத்த விண்ணப்பங்கள் பலமுறை மறுக்கப்பட்டிருந்தாலும், இறுதியாக, ஆகஸ்ட் 21ம் தேதி, இவ்விருவரும் சந்தித்து கலந்துரையாடினர் என்று, அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டில் இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்கள் எதுவும் வன்முறையைத் தூண்டவில்லை, ஆயினும், போராட்டதாரர்கள் வன்முறையால் ஒடுக்கப்படுகின்றனர் என்று, பேராயர் Kondrusiewicz அவர்கள், பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

எதிர்க்கட்சியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, பொதுமக்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பது போன்ற விவகாரங்கள் குறித்து பரிசீலனை செய்வதற்கு, பலதரப்புக்களைக்கொண்ட குழு ஒன்று உருவாக்கப்படுமாறும், பேராயர் Kondrusiewicz அவர்கள் பரிந்துரைத்தார்.

சிறையில் உள்ளவர்களை, அருள்பணியாளர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என்றும், மேய்ப்புப்பணியாளர்களாகிய நாங்கள், யாரையும் தீர்ப்பிடுவதற்காகச் செயல்படவில்லை, மாறாக, குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் மனம் மாறவேண்டும் என்று அழைப்புவிடுப்பதற்காகப் பணியாற்றுகிறோம் என்பதையும், பேராயர் Kondrusiewicz அவர்கள் தெளிவுபடுத்தினார்.

கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் அருள்பணியாளர்கள்

மேலும், பெலாருஸ் நாட்டில், ஏறத்தாழ 26 ஆண்டுகளாக தொடர்ந்து அரசுத்தலைவர் பதவி வகிக்கும் அலெக்ஸாண்டர் லூகஷென்கோ அவர்கள், மக்களின் அரசுத்தலைவர் இல்லை என்று சொல்லி, கத்தோலிக்க மற்றும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை அருள்பணியாளர்கள், அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே, பேராயர் Kondrusiewicz அவர்கள் பரிந்துரைத்த, பலதரப்புக்களை உள்ளடக்கிய குழு ஒன்று உருவாக்கப்படுவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டிருப்பதாக, பெலாருஸ் நாட்டின் ONT அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது என, ஆசியச் செய்தி கூறுகிறது.

1991ம் ஆண்டில் சோவியத் யூனியன் கூட்டமைப்பு கலைந்ததையடுத்து, 1994ம் ஆண்டில் பதவிக்கு வந்த லூகஷென்கோ அவர்கள், ஐரோப்பாவின் ``கடைசி சர்வாதிகாரி'' என்று, ஊடகங்களால் வருணிக்கப்படுகிறார். (AsiaNews)

25 August 2020, 14:19