தேடுதல்

Vatican News
பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி  

புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக இணையவழி போராட்டம்

ஆகஸ்ட் 16, ஞாயிறு, காலை 9 மணி முதல், மாலை 6 மணி வரை நடைபெறும், இணையவழி எதிர்ப்புப் போராட்டத்தில், கல்வியாளர்களும், மாணவர்களும் பங்குகொள்ளுமாறு பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்திய நடுவண் அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கை, சமுதாயத்தில் மிகவும் நலிவடைந்தவர்களைப் பாதிக்கும் என்பதால், அது குறித்த கத்தோலிக்கரின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, ஆகஸ்ட் 16, வருகிற ஞாயிறன்று நடைபெறவிருக்கும், இணையவழி போராட்டத்திற்கு அனைவரும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு, சென்னை-மயிலைப் பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

வருகிற ஞாயிறு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த இணையவழி எதிர்ப்புப் போராட்டத்தில், கல்வியாளர்களும், மாணவர்களும் பங்குகொள்வதற்கு, அனைத்துப் பங்குத்தளங்களும், கத்தோலிக்க கல்வி நிறுவனங்களும் அவர்களை ஊக்குவிக்குமாறு, தமிழகக் கத்தோலிக்க கல்விக் கழகத்தின் தலைவராகிய பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளால், பொது இடங்களில் நம் எதிர்ப்புக்களைத் தெரிவிக்க, கூட்டங்களை ஏற்பாடு செய்வது கடினம் என்பதால், இத்தகைய இணையவழி போராட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும், பேராயர் ஜார்ஜ் ஆன்டனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

புதிய தேசிய கல்விக்கொள்கை 2020, இந்திய அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள, பொதுநல, சமயச்சார்பற்ற தன்மை, சமுதாய நீதி, சிறுபான்மையினரின் உரிமைகள், மற்றும், கூட்டாட்சி அமைப்பு கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும் என்றும், பேராயரின் அறிக்கை கூறுகிறது.  

இந்தப் புதிய தேசியக் கல்விக்கொள்கை 2020 குறித்து கத்தோலிக்கத் திருஅவை மிகுந்த கவலைகொண்டிருப்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கென்று இடம்பெறும் இணையவழி போராட்டத்தில் அனைவரும் இணையுமாறு பேராயரின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.

14 August 2020, 13:12