தேடுதல்

கந்தமால் மறைசாட்சிகள் கந்தமால் மறைசாட்சிகள் 

ஆகஸ்ட் 30, கந்தமால் மறைசாட்சிகள் நாள்

2008ம் ஆண்டில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட, ஒடிசா மறைசாட்சிகளை நினைவுகூருமாறு, இறைவார்த்தை சபையின் பேராயர் பார்வா அவர்கள் அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒடிசா மாநில மறைசாட்சிகளின் வாழ்வும், துணிவும், திருஅவையின் மரபுரிமைப் பண்புகளாக இருக்கின்றன, இவற்றை, வருங்காலத் தலைமுறைகளுக்கு வழங்க விரும்புகின்றோம் என்று, அம்மாநில கத்தோலிக்க தலத்திருஅவை தலைவர் கூறினார்.

ஆகஸ்ட் 30, இஞ்ஞாயிறன்று மறைசாட்சிகள் நாள் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, செய்தி வெளியிட்டுள்ள, கட்டக்-புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், 2008ம் ஆண்டில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட, ஒடிசா மறைசாட்சிகளை நினைவுகூருமாறு, விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒடிசா மாநில கத்தோலிக்க ஆயர் பேரவையின் விருப்பத்தின்பேரில், ஆகஸ்ட் 30,  இஞ்ஞாயிறன்று, கந்தமால் மறைசாட்சிகளின் 12வது நினைவு நாள் சிறப்பிக்கப்படுகின்றது, நாம் எத்தகைய இன்னல்களை எதிர்கொண்டாலும், வாழ்வில் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதை, இந்த மறைசாட்சிகள் நாள், நமக்கு அறிவுறுத்துகின்றது என்று, பேராயர் பார்வா அவர்களின் செய்தி கூறுகின்றது. 

மறைசாட்சிகளின் இரத்தம், திருஅவையின் வித்து என்று கூறிய, தெர்த்தூலியன் அவர்களது கூற்று, நம் இதயங்களில் எதிரொலிக்கட்டும் என்றும், கந்தமால் மற்றும், கட்டக்-புவனேஸ்வர் உயர்மாறைமாவட்டத்தின் வாழ்வில், இது உண்மையாகட்டும் என்றும், அச்செய்தி வலியுறுத்துகிறது.

2008ம் ஆண்டில், இந்து தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறையில், பழங்குடி இன மக்கள் மற்றும், தலித் கிறிஸ்தவர்களின் 395 ஆலயங்கள் மற்றும், வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. குறைந்தது நூறு பேர் கொல்லப்பட்டனர். நாற்பது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டனர், பள்ளிகள், சமுதாயநல மையங்கள், நலவாழ்வு மையங்கள் ஆகியவை அழிக்கப்பட்டன மற்றும் சூறையாடப்பட்டன. 75 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்தனர். பலர், இந்து மதத்தை தழுவ கட்டாயப்படுத்தப்பட்டனர்.

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, இந்துமதத் தலைவர் Swami ‎Lakshmanananda Saraswati அவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் பொறுப்பேற்றதையும் விடுத்து, இந்துமதத் தீவிரவாதிகள், ஆகஸ்ட் 25ம் தேதி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். (AsiaNews)

29 August 2020, 13:54